சிலாங்கூர் ஆட்சி மன்றம்: தலைவர் இடமாற்றம் மீது செலாயாங் நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்கட்டும்

செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் ஜைனல் அபிடின் ஆலாலா திடீரென இட மாற்றம் செய்யப்பட்டது மீது நடவடிக்கை எடுப்பதை செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களிடம் விட்டு விடுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறியுள்ளார்.

அந்த விவகாரம் தொடர்பில் செலாயாங் நகராட்சி மன்றத்துக்கு முழு சுயாட்சி அதிகாரம் இருப்பதால் பிரச்னையிலிருந்து விலகி இருப்பது என மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

“இப்போதைக்கு நாங்கள் நிலைமையைக் கண்காணிப்போம். மாநில அரசாங்கம் அதனை (இட மாற்றத்தை) தடுக்க முடியாது என்பது அல்ல.  செலாயாங் நகராட்சி மன்றத்துக்கு முழு சுயாட்சி அதிகாரம் உள்ளது.”

“ஒவ்வொரு ஊராட்சி மன்றத்துக்கு அந்த சுயாட்சி அதிகாரம் உள்ளது,” எனக் குறிப்பிட்ட லியூ பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற மேயர் முகமட் ரோஸ்லான் சாக்கிமான் இது போன்று திடீரென இட மாற்றம் செய்யப்பட்ட பின்னர் அந்த மாநகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக் காட்டினார்.

அந்த பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற விவகாரத்தில் அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தார்கள்.

இதனிடையே செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜைனல் அபிடின் இட மாற்றம் செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து பொதுச் சேவைத் துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக லியூ தகவல் வெளியிட்டார்.

“செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து அந்த விவகாரம் மீது ஆட்சேபம் தெரிவித்தனர்.

பொதுச் சேவைத் துறைக்கு ஆட்சேபக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

24 மணி நேர நோட்டீஸ்

2011ம் ஆண்டு செலாயாங் நகராட்சி மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட ஜைனல் அபிடினுக்கு 24 மணி நேரத்திற்குள் அவர் இந்தான் என்ற தேசிய பொது நிர்வாகப் பயிற்சிக் கழகத்துக்கு மாற்றப்படும் தகவலைத் தெரிவிக்கும் நோட்டீஸ் ஒன்றை நவம்பர் 24ம் தேதி கிடைத்தது.

அந்த விஷயம் மீது அடுத்த நாள் நிருபர்களைச் சந்தித்த செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுச் சேவைத் துறை தனது அதிகாரத்துக்கு அப்பால் செயல்படுவதாகக் கூறிக் கொண்டனர்.

அந்த இட மாற்றம் 1976ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றச் சட்டத்தையும் மீறுவதாகவும் அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

பத்துமலைக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட விஷயத்தில் சிலாங்கூர் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என ஜைனல் அபிடின் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அவருடைய இட மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மஇகா, பத்துமலை கோயில் நிர்வாகக் குழு ஆகியவற்றின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ள அந்த டோல்மைட் பார்க் அவினியூ ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் 2007ம் ஆண்டு பிஎன் சிலாங்கூர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என அவர் ஜைனல் நிருபர்களிடம் கூறியிருந்தார்.