மலேசிய சிவில் சமூக இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும், ஜிபிஎம்

-சைட் இப்ராகிம், ஜிபிஎம் மாநாடு இயக்குனர், நவம்பர் 17, 2012.

கடந்த 55 ஆண்டு காலத்தில் மலேசியா மேம்பாடற்ற நிலையிலிருந்து ஒரு மேம்பாடடைந்த நாடாக முன்னேறியுள்ளது. 1957 மற்றும்1963 ஆம் ஆண்டுகாலத்தில் துடிப்பு மிக்க மக்களைக் கொண்ட, பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்ட, புதியதோர் தேசிய நாடாக மலேசிய உருவெடுத்தது.

நாம் மகிழ்ச்சியையும் துன்பங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் அனுபவித்துள்ளோம். பொருளாதார மேம்பாட்டில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. மே 13 சம்பவம், பாலிங் பட்டினிப் போராட்டம், மூரும் அணை முற்றுகை போன்ற கடந்த மற்றும் சமீபகாலத்திய சம்பவங்கள் நமது நாட்டில் முறைகேடுகள் இருக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.

அனைத்து இனங்களையும் சார்ந்த 40 விழுக்காடு குடும்பங்கள் வறுமை மற்றும் வருமான சமசீரற்ற நிலையில் இருப்பது; இன மற்றும் சமய பேதங்கள், ஊழல், அல்லக்கைகள்; வேற்றுமை காணல் போன்றவை நமது நாட்டின் உண்மையான பிரச்னைகளாக இருந்தன, இன்னும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

நாட்டின் முன்நிலை ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் இருந்து வருவது நமது மக்களுக்கு தகவல் அளித்தல் மற்றும் கற்பித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவவில்லை.

இம்முட்டுக்கட்டைகள் சிவில் சமூக அமைப்புகளை மெளனிகளாக்கிவிடவில்லை. சந்திப்புகள் நடத்துவது, மகஜர்கள் தாக்கல் செய்வது, சம்பந்தப்பட்ட இலாகாகளுடன் கலந்துரையாடல் நடத்துவது, அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் வழி இந்த சிவில் அமைப்புகள்  நாட்டை மேன்மையடையச் செய்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளன. நாடும் மக்களும் எதிர்கொண்ட மனித உரிமைகள், அரசியல், நல்லாட்சி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமுதாய-கலாட்சாரம் மற்றும் கல்வி போன்றவை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளை  சிவில் சமூக அமைப்புகள் முரண்பாடின்றி திடமாக கையாண்டுள்ளன.

உண்மையில், மலேசிய நாடு தோன்றிய நாளிலிருந்து சிவில் சமூக அமைப்புகள்தான் மாற்றத்தின் முகவர்களாக இருந்துள்ளன. இதன் அடிப்படையில் மலேசிய செயல்நடவடிக்கை கூட்டமைப்பு (ஜிபிஎம்) 25 சிவில் சமூக அமைப்புகளைக் கொண்ட கட்சி சார்பற்ற ஒரு பல்லின மற்றும் பல்வேறு சமய அமைப்பாகத் தோற்றம் கண்டது. (உறுப்பினர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது)

“மாற்றத்தை விழையும் அரசு சார்பற்ற அமைப்புகள்” என்ற கருப்பொருளைக் கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு இம்மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சி நவம்பர் 18, 2012 இல் கோலாலம்பூர் & சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00 வரையில் நடைபெறும்.

இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஜிபிஎம்மின் இலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.  இந்நாட்டிலுள்ள அரசு சார்பற்ற அமைப்புகள் தோழமை உணர்வுடன் ஒன்றுகூடி உரம் பெற்று ஒரு சிறந்த மலேசியாவை நம் அனைவருக்குமாக உருவாக்குவதற்கு ஒரு தளம் அமைத்தல்தான் அந்த இலட்சியம்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நமது நாட்டின் முக்கியமான பிரச்னைகளையும் சவால்களையும் கையாள்வதற்கு ஜிபிஎம் ஒன்றிணைந்து கடப்பாட்டுடன் இருக்கிறது.

 

ஜிபிஎம் மாநாட்டின் குறிக்கோள்கள்:

1. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முழுமையான முகவராக சிவில் சமூக இயக்கத்தை வலுப்படுத்தல்.

2. சமுதாயத்திற்கும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கிடையிலான உறவுமுறை மற்றும் தோழமை உணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தல்.

3. எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால்கள் மீதான உரையாடல்கள் தொடங்குதல் மற்றும் சாத்தியமான தீர்வுகளை தெரிவித்தல்.

4. ஜிபிஎம் மற்றும் அதன் உறுப்பினர்கள் படைத்த சாதனைகளை விளக்கும் காட்சிகள் பார்வைக்கு வைத்தல்.

 

ஜிபிஎம்மின் இந்த ஒரு நாள் மாநாட்டில்  இடம்பெறும் நிகழ்ச்சிகள்:

1. சிறப்பு உரை – டான் இயு சிங், ஜிபிஎம் மற்றும் கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் தலைவர்.

2. கருத்தரங்கு – சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கான முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் புரிந்து கொள்ளுதல்.

 

கருத்தரங்கு நடுவர் குழுவின் உறுப்பினர்கள்:

1. டாக்டர் ஃபரூக் மூசா (இயக்குனர், இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி)

2. டாக்டர் குவா கியா சூன் (இயக்குனர், சுவாராம்)

3. வோங் மெங் சூ (சுற்றுச்சூழல் ஆர்வலர்)

4. கா. ஆறுமுகம் (ஆலோசகர், தமிழ் அறவாரியம் மலேசியா)

 

இக்கூட்டத்தில் அனைத்து ஜிபிஎம் உறுப்பினர்களும் பங்கேற்பர்.

இதர அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இம்மாநாட்டிற்கு அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஜிபிஎம் செயலகத்தில் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கான கட்டணம் ஒருவருக்கு ரிம20.

பதிவு செய்துகொள்வதற்கு மற்றும் தகவல் அல்லது விளக்கம் பெற ஜிபிஎம் அலுவலகத்துடன் தொலைபேசி எண் 03-2272 3594, கைத்தொலைபேசி 012-3206 959 வழி தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் : [email protected]

TAGS: