‘நெடும் நடைப் பயணத்தில்’ கலந்துகொள்ளும் மூத்த குடிமக்களுக்குப் பாராட்டு

குவாந்தானிலிருந்து கோலாலும்பூருக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஹிம்புனான் ஹிஜாவ் நெடும் நடைப்பயணத்தில் மூத்த குடிமக்களும் பங்கேற்பதைச் சமூக விழிப்புணர்வு பெருகி இருப்பதன் அடையாளம் என சுயேச்சைப் பட இயக்குனர் ஒருவர் வருணித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்குமுன் மற்ற நடைப்பயணர்களுடன் சேர்ந்துகொண்ட டான் சூய் மூய்(வலம்), 32, அந்த 300கிலோ மீட்டர் நடைப்பயணத்தில் மூத்த குடிமக்கள் பலர் ஊக்கத்துடன் பங்கேற்றிருப்பது கண்டு அசந்து போனார்.

“மலேசியர்கள் மிகவும் மாறிவிட்டார்கள். ஈராண்டுகளுக்குமுன், ‘அங்கள்களும்’ அண்டிகளும்’ இப்படிச் செய்வார்கள் என்பதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. தெரிந்தே இதில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.

டான், குவாந்தானுக்கு அருகில் உள்ள காபெங் மீனவக் கிராமத்தில் பிறந்தவர். அங்கு லைனாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலை அமைவதை அவர் எதிர்க்கிறார்.

ஆலை-எதிர்ப்பு இயக்கத்தைச் சித்திரிக்கும் ஆவண படமொன்றையும் அவர் தயாரித்திருக்கிறார்.

“இது சமூக விழிப்புணர்வின் ஒரு பகுதியாகும். முன்பெல்லாம். நாட்டில் எது நடந்தால் நமக்கென்ன என்றுதான்  பெரும்பாலோர் இருப்பார்கள். இப்போது தங்கள் கருத்தையும் வெளிப்படுத்துவது அவசியம் என்று நினைக்கிறார்கள். இதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்றார்.

வியாழக்கிழமை மாரான் சென்ற டான், அங்கு சுமார் 80 சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டார். அவர்கள் 31கிலோ மீட்டர் நடந்த பின்னர் தெமர்லோவில் முகாமிட்டனர்.

சுத்திகரிப்பு ஆலையால் மலேசியர் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த எதிர்ப்பு இயக்கத்துக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று டான் வலியுறுத்தினார்.

காலுறை அன்பளிப்பு

இதனிடையே, அதிகாலை மணி 3.30க்கு இணையப்பயனர் ஒருவர் 100ஜோடி காலுறைகளைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“எல்லாரும் பங்கேற்கிறார்கள். நான் வீட்டில் சும்மா இருப்பது சரியல்ல”, என்று ஒரு கடையில் விற்பனை பணியாளராக பணிபுரியும் சுசன் லாவ் கூறினார். தம் முதலாளி அந்த நடைப்பயணத்தை ஆதரிப்பதாகவும் அவர்தான் அந்தக் காலுறைகளை அன்பளிப்பாக வழங்கினார் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்து  லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு ஆலையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.அதற்கு
ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வாங் டெக் தலைமை வகிக்கிறார்.

அந்த ஆலைக்குக் கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதியை இரத்துச் செய்யக் கோரி கெபாங் குடியிருப்பாளர் மூவர் செய்துகொண்ட மனுவை குவாந்தான் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

நடைப்பயணர்கள் நான்கு நாள் நடந்து நேற்றிரவு தெமர்லோ சென்றடைந்தனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகருக்கு வரும் வழியில்  மெந்தாகப், பெந்தோங், கெந்திங் மலை ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவர்.