அன்வார்: பணமாய் கொட்டுகிறது, ஆனால் பிஎன் வெளியேற்றப்படுவது நிச்சயம்

மக்கள் அடுத்த ஆண்டில் அரசாங்கம் கொடுக்கும் அன்பளிப்பை வாங்குவதற்குக் காத்திருக்கிறார்கள். அதே வேகத்தில் ஆளும் கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

“மக்கள் பிஆர்1எம் (1மலேசியா உதவித்தொகை ரிம500)-மை வாங்கிக் கொண்டாலும் பிஎன்னைப் பதவியை விட்டிறக்குவது உறுதி”, என நேற்றிரவு கிளந்தானில், மக்கள் எழுச்சிப் பேரவையில் உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டார்.

மக்கள் எழுச்சியை, நிரந்தர வாக்கு வங்கிகளாகக் கருதப்படும் சாபா, சரவாக் உள்பட நாடுமுழுக்க நடைபெறும் பேரணிகளில் காண முடிவதாக அவர் சொன்னார்.

“அவர்களும்(பிஎன்) இதை அறிவர். அதனால்தான் இப்போது வன்செயலில் இறங்கும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். நாங்களும் பாஸில் உள்ள எங்கள் நண்பர்களும் அதற்கு இலக்காகி வருகிறோம்”.

தம் கூற்றுக்கு நான்காம் சுல்தான் முகம்மட் அரங்கில் கூடியுள்ள கூட்டமே தக்கச் சான்று என்று அன்வார் குறிப்பிட்டார். நேற்றைய பேரணிக்கு சுமார் 50,000 பேர் திரண்டிருந்தனர்.அவர்கள் பெர்சே, பெல்டா உரிமைபோராட்டக்குழு, லைனாஸ்-எதிர்ப்பு முதலிய இயக்கங்களைப் பிரதிநிதிக்கும் வகையில் கைகளில் மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு, பச்சை கொடிகளைப் பிடித்திருந்தனர். 

நேற்றைய பேரணி நாடு முழுக்க பக்காத்தான் ஏற்பாடு செய்துள்ள தொடர் பேரணியில் ஒரு பகுதியாகும். அத்தொடரில் உச்சப் பேரணி ஜனவரி 12–இல் கோலாலும்பூரில் நடைபெறும்.

ஊழல் என்றால் விசாரணை செய்வீர்: பிஎன்னுக்குச் சவால்

“புத்ரா ஜெயாவைக் கைப்பற்றியதும் மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, சிவப்பு வண்ணங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்போம்”, என்று பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு முழங்கினார்.

பின்னர் பேசிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அம்னோ எல்லா இடங்களிலும் ஊழல் இருப்பதாக சொல்வதை நிராகரித்தார். பக்காதான் ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்றாரவர்.

“பக்காதான் ஆளும் மாநிலங்களில் ஊழல் இருந்தால் அதை ஆட்சியிலிருந்து அகற்றுங்கள். எங்களுக்கு ஊழல் மாநிலம் தேவையில்லை. அம்னோ கூறுவதுபோல் ஊழல் இருந்தால் விசாரிக்கட்டும்”, என்றவர் சவால் விடுத்தார்.

அதே மேடையில் பேசிய டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அம்னோவில்தான் ஊழல் உள்ளது, அது கற்பனை அல்ல, உண்மை என்றார்.

பாஸ் அதன் மாநாட்டில் பக்காத்தானுடன் இணைந்து புத்ராஜெயாவைக் கைப்பற்ற உறுதிபூண்டிருப்பதாக அறிவித்திருப்பதை லிம் கவனப்படுத்தினார்.பக்காத்தான் கூட்டணியில் டிஏபி இருப்பது மலாய் சமூகத்தின் ஒற்றுமைக்குக் கேடு என்று ஆளும் கட்சி அடிக்கடி கூறுவதைப் பற்றியும் லிம் (இடம்) தம்முரையில் குறிப்பிட்டார்.

“பக்காத்தான் வென்றால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பார்கள் என்கிறார்கள்…..ஆட்சியாளர்களின் நிலை அபாயத்துக்கு உள்ளாகும்…… இஸ்லாம் ஓரங்கட்டப்படும்…… மலாய்க்காரர்கள் சொந்த நாட்டிலேயே பிச்சைக்காரர்கள் ஆவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள்…..அது உண்மையா?”, என்றவர் கேட்கக் கூட்டத்தினர் “இல்லை” என்று பதில்குரல் கொடுத்தார்கள். திரும்பத் திரும்ப அவர் “உண்மையா” என்று கேட்க அவர்கள் “இல்லை” என்றே பதில்குரல் கொடுத்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக அரசாங்கம் மாறும் என்பதற்காக அறிகுறி தெரிவதாக லிம் குறிப்பிட்டார்.

“நம் வெற்றி பக்காதான் கட்சிகளின் ஒற்றுமையையும் கடப்பாட்டையும் பொறுத்துள்ளது. அவை ஒரே குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். நாம் பிஎன்னிலிருந்து மாறுபட்டவர்கள் என்பதைக் காண்பிப்போம்”, என்றாரவர்.