பங்குகள் பரிமாற்றத்துக்கு பின்னர் கட்டண உயர்வு இருக்காது என்கிறார் ஏர் ஏசியா தலைவர்

மலேசிய விமான நிறுவனத்துடன் அண்மையில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் ஏர் ஏசியா தொடர்ந்து குறைந்த கட்டண விமான நிறுவனமாகவே இருந்து வரும். அதன் நடப்புக் கட்டண அமைப்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.

இவ்வாறு அதன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் உறுதி அளித்துள்ளார். “ஏர் ஏசியாவைப் பொறுத்த வரையில் கட்டண உயர்வு இருக்கும் என்னும் பேச்சுக்கோ அல்லது போட்டி குறையும் என்ற பேச்சுக்கோ இடமில்லை,” என்றார் அவர்.

“ஏர் ஏசியா குறைந்த கட்டண விமான நிறுவனமாக தொடகப்பட்டது. நாங்கள் தொடர்ந்து குறைந்த கட்டண விமான நிறுவனமாகவே தொடர்ந்து இருந்து வருவோம். கட்டணம் உயர்த்தப்பட்டால் எங்களுக்கு (ஏர் ஏசியா) எந்த நன்மையும் இல்லை.”

டோனி இன்று துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் உரை நிகழ்த்திய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

ஏர் ஏசியாவுக்கும் மலேசிய விமான நிறுவனத்துக்கும் இடையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் போது அவற்றுக்கு இடையில் போட்டி குறைந்து ஏர் ஏசியா கட்டணங்களை உயர்த்தும் எனக் கூறப்படுவது தொடர்பில் டோனி கருத்துரைத்தார்.

“ஏர் ஏசியா என்பதே குறைந்த கட்டணங்களை கொண்டதாகும். நாங்கள் அதிகமான பயணங்களை நாடுகிறோம். கூடுதலான பயணங்களை மேற்கொள்ள வேண்டுமானால் நாங்கள் குறைந்த கட்டணத்தையே விதிக்க வேண்டும்.”

“உங்களுக்கு மற்ற தேர்வுகள் இருந்து எங்கள் (ஏர் ஏசியா) கட்டணம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எங்களுடன் பறக்க மாட்டீர்கள்,” எனக் குறிப்பிட்ட அவர் ஏர் ஏசியாவும் கூட வர்த்தகத்தைப் பெருக்குவதற்குப் போட்டியிட வேண்டியிருப்பதாகச் சொன்னார்.

எம்ஏஎஸ்-ஏர் ஏசியா ஒத்துழைப்பு மீது மலேசியர்கள் கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் டோனி கேட்டுக் கொண்டார். அந்த ஒத்துழைப்பு வான் போக்குவரத்து தொழிலுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் பயன் அளிக்கும் என்றார் அவர்.

“இயற்கையாகவே மலேசியர்கள் வெற்றியைப் பார்த்த பின்னரே நம்புவார்கள். பின்னர் அவர்கள் தங்கள் தவறுகளுக்காக வருந்துவர்.”

“ஆகவே எங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள். அந்த ஒப்பந்தம் ஆதாயகரமானது என்பதை உங்களுக்கு மெய்பித்துக் காட்டுவோம் என்றார் டோனி.

எம்ஏஎஸ்-ஸையும் ஏர் ஏசியா-வையும், பங்கு பரிமாறத்தைக் குறை கூறுகின்ற தரப்புக்கள் நிர்வாகத்துடன் ஒன்றாக அமர்ந்து அவற்றின் வாதங்களை எடுத்து வைப்பதை தாம் வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.