பத்துமலை ‘கொண்டோ’ திட்டம் அங்கீகரிக்கப்பட்ட விஷயத்திலிருந்து பக்காத்தான் ராக்யாட் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியாது என வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சோர் சீ ஹியூங் கூறுகிறார்.
அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் அவர்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு என்றார் அவர்.
செலாயாங் நகராட்சி மன்றத்தில் ஓரிட மையம் அத் திட்டத்தின் கட்டுமான வரைபடத்துக்கு 2008 மார்ச் 24ம் தேதி அங்கீகாரம் அளித்துள்ளது. அது 12வது பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் பிந்தியதாகும். அதனை நான்கு மாதங்களுக்குப் பின்னர் பக்காத்தான் தேர்வு செய்த நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர்.
“அந்தத் திட்டத்துக்கு பக்காத்தான் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் 2008 ஜுலை 10ம் தேதி அனுமதி கொடுத்துள்ளனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடப்பு மாநில அரசாங்கம் நியமித்தவர்கள்,” என சோர் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
பத்துமலைக்கு மிக அருகில் அமையும் அந்த 29 மாடி கொண்டோ திட்டம் அந்தச் சுற்றுலாத் தலத்தின் அழகைக் கெடுத்து விடும் எனக் குறை கூறப்பட்டுள்ளது.
அந்த விஷயம் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்பட்டதாகவும் அப்போது அந்த கொண்டோ மேம்பாட்டாளரான டோல்மைட் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்ட விவரங்களை வழங்கியதாக சோர் சொன்னார்.
அங்கீகாரம் திட்ட அனுமதி, கட்டுமான வரைபடம்- என இரண்டு கட்டங்களில் கொடுக்கப்படுகின்றது.
சோர் தமது முகநூல் பக்கத்தில் அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்ட பல்வேறு கட்டங்களை விளக்கியுள்ளார்.
2008ல் தான் இழந்த சிலாங்கூரை பிஎன் மீண்டும் கைப்பற்றுமானால் அந்தத் திட்டத்தை நிறுத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தீபாவளியன்று வாக்குறுதி அளித்துள்ளார்
அந்த மாநிலத்தில் பிஎன் நிர்வாகம் அதிகாரத்தில் இருந்த போது செலாயாங் நகராட்சி மன்றம் அந்த ‘கொண்டோ’ திட்டத்தை அங்கீகரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் பக்காத்தான் அரசாங்கம் அந்தத் திட்டத்தை மறுபரிசீலினை செய்வதற்காக அதன் கட்டுமானத்தை நிறுத்தி வைத்துள்ளது.
“அந்த 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்தை பிஎன் அல்லது பக்காத்தான் அங்கீகரித்ததா என்பதை பரிசீலிக்காமால் நஜிப்பின் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது,” என அந்த அமைச்சர் மேலும் கூறினார்.
சோர் அளித்த விவரங்கள்:
செப்டம்பர் 27, 2007- செலாயாங் நகராட்சி மன்ற ஓரிட மையம் அந்தத் திட்டத்தின் திட்ட அனுமதியை அங்கீரித்தது
நவம்பர் 29, 2007- அந்த திட்ட அனுமதிக்கு செலாயாங் நகராட்சி மன்ற முழு வாரியக் கூட்டம் நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரத்தை வழங்கியது.
நவம்பர் 30 2007- இறுதி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, அப்போது எல்லாத் திட்டங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மார்ச் 8 2008- 12வது பொதுத் தேர்தல்
மார்ச் 24, 2008- ஓரிட மையம் கட்டுமான வரைபடத்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரத்தைக் கொடுத்தது
ஜுன் 26, 2008- கட்டுமான வரைபடத்துக்கு இறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போது திட்டங்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. (செலாயாங் நகராட்சி மன்றத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை)
ஜுலை10, 2008– பக்காத்தானைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓரிட மையக் குழு கட்டுமான வரைபடத்துக்கு மீண்டும் நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரத்தை வழங்கியது
சோர்-ன் முகநூல் பதிவுக்கு நடப்பு செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினரான லீ காய் லூன் உடனடியாகப் பதில் அளித்தார்.
ஜுன் 2008 மாற்றம் நிகழ்ந்த காலமாகும். பக்காத்தான் உறுப்பினர்கள் அந்த ஆண்டு ஜுலை மாதம் தான் நியமிக்கப்பட்டார்கள் என அவர் சொன்னார்.
2009ம் ஆண்டு லீ செலாயாங் நகராட்சி மன்றத்துக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சோர் அந்த விவகாரத்தை பிரித்துப் பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“பக்காத்தான் கீழ் இருந்த ஓரிட மையம் கட்டுமான வரைபடத்துக்கு நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கலாம். என்றாலும் “அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும்.”
பிஎன் நிர்வாகத்தில் 2007ம் ஆண்டு அந்தத் திட்டத்துக்கு முக்கிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது தான் முக்கியமான விஷயமாகும் எனக் கூறிய லீ, வரைபட அனுமதி என்பது வெறும் நடைமுறையே என்றார்.