பிஎன்னில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை டிஎபி நிராகரித்தது

பிஎன் கூட்டணியில் இணையுமாறு கூட்டரசு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்த அழைப்பை டிஎபி நிராகரித்துள்ளது.

தனது பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளான பாஸ், பிகேஆர் ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கப் போவதாகவும் அது சூளுரைத்தது.

நஸ்ரியின் கருத்துக்கள் “திடீரென முளைத்துள்ளன” எனக் குறிப்பிட்ட டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், நஸ்ரியின் நோக்கம் என்ன என்பதும் தமக்குத் தெரியாது என்றார். அத்துடன் டிஎபி அத்தகைய சாத்தியம் குறித்து ஒரு போதும் பேசியதில்லை என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் பக்காத்தான் தோழமைக் கட்சிகளுடன் உறுதியாக இணைந்துள்ளோம். நாங்கள் பல இனம். ஒரு வேளை மசீசவும் கெரக்கானும் தங்களது தொகுதிகளில் தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கக் கூடும்,” என லிம் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“ஆனால் அவ்விரு கட்சிகளும் ஒர் இனத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியும். நாங்கள் எல்லா மலேசியர்களையும் சார்ந்துள்ளோம். ஆகவே டிஎபி பிஎன்னில் சேரும் என்ற கேள்வியே எழவில்லை.”

நஸ்ரியின் கருத்துக்கள் நேற்று சின் சியூ நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் வெளியாகின. 1969ம் ஆண்டு எதிர்த்தரப்பில் இருந்த கெரக்கான் கூட்டணியில் சேருமாறு அழைக்கப்பட்டதை நஸ்ரி அந்தப் பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

‘பல தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன’

டிஎபி தலைவர்கள் கடந்த 45 ஆண்டுகளில் தங்களது அரசியல் நம்பிக்கைகளுக்காக பல  தியாகங்களைச் செய்துள்ளனர், கடுமையாக உழைத்துள்ளனர் என்று ஈப்போ தீமோர் எம்பி லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

அதன் தலைவர்கள் “நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்கினர். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.” இன சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய உரிமைகளுக்காக போராடுவது என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தடுக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளையும் இழந்துள்ளனர்.”

“அந்தத் தியாகங்கள் அனைத்தும் பிஎன்னில் மசீசவுக்குப் பதில் டிஎபி இடம் பெறுவதற்காக அல்ல”, என அந்த மூத்த டிஎபி தலைவர் விடுத்த அறிக்கை கூறியது.

“இன வம்சாவளி அடிப்படையில் ‘பிரித்தாளும்’ அரசியலும் தனிப்பட்ட பேராசைக்காக பொது நலன்கள் பலியிடப்படுவது  முற்றாக அகற்றப்பட்ட புதிய அரசியலும் புதிய தேசிய இணக்கமும் மட்டுமே மலேசியாவைக் காப்பாற்ற முடியும்.”