பத்துமலைக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் (கொண்டோ) திட்டம் மீது அதன் மேம்பாட்டாளரான டோல்மைட் சென் பெர்ஹாட் ‘பொறியியல் தீர்வு’ ஒன்றை சமர்பித்த பின்னர் சுற்றுச் சூழல் துறையும் கனிவள மண் அறிவியல் துறையும் அந்தத் திட்டத்துக்கு ‘ஆட்சேபம் தெரிவிக்கவில்லை’.
“அந்த கொண்டோவைக் கட்டுவதற்கு அது பொருத்தமான இடம் அல்ல என முதலில் மண் அறிவியல் துறை கூறியது. ஆனால் அதற்கு பொறியியல் தீர்வை வழங்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதாக மேம்பாட்டு நிறுவனம் காட்டியது.’
“அடுத்து சுற்றுச்சூழல் துறை சான்றிதழும் அனுமதியும் வழங்கியது. அதற்குப் பின்னர் மண் அறிவியல் துறைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் சோர் சீ ஹியூங் மக்களவையில் இன்று கூறினார்.
அவர் தமது அமைச்சுக்கான 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.
சுற்றுச்சூழல் துறை ஆட்சேபம் தெரிவித்த போதிலும் 2007ம் ஆண்டு முந்திய பிஎன் அரசாங்கம் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களான ரோனி லியூ-வும் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் ஏற்கனவே கூறியுள்ளனர்.