ரிம45 பில்லியன் கடனை ‘நல்ல முறையில்’ திரும்பப் பெற பிடிபிடிஎன் விரும்புகிறது

வரவேண்டிய பணத்தில் பாதி வராமல் நிற்கும் வேளையில் அதைத் திரும்பப் பெற தேசிய உயர்கல்வி நிதி(பிடிபிடிஎன்) கடுமையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றுதான் எவரும் நினைப்பர்.

ஆனால், பிடிபிடிஎன்னைப் பொறுத்தவரை அதை “நல்ல முறையில்” திரும்பப் பெறவே விரும்புகிறது என்கிறார் அதன் தலைமை செயல் அதிகாரி அகோஸ் சோலான்.

“நல்ல வழி இருக்கிறது, கடுமையான வழி இருக்கிறது. இதுவரை நல்லவிதமாக, மிதமாக நடந்து கொண்டிருக்கிறோம். ‘கடனைத் திரும்பச் செலுத்துங்கள்’ என்று செய்தித்தாள்களிலும், அறிவிப்புப் பலகைகளிலும் விளம்பரம் போடுகிறோம்.

“அவர்களிடம் ‘முடிந்ததைக் கொடுங்கள்’ என்கிறோம். அடுத்து அவர்களுக்குக் கோரிக்கை கடிதம் அனுப்புவோம்”, என்று அகோஸ் கூறினார்.

ஆனால், கடன் வாங்கியவர்கள் பற்றி பிடிபிடிஎன்னிடமுள்ள விவரங்கள் இற்றைப்படுத்தப்படவில்லை என்பதால் அந்தக் கோரிக்கைக் கடிதங்கள் உரியவர்களிடம் போய்ச் சேர்வது சந்தேகமே.

இப்படிப்பட்ட நிலையிலும், வங்கிகள் செய்வதுபோல் கடனை வசூலிக்கும் அமைப்புகளை அமர்த்திக்கொள்ள பிடிபிடிஎன் தயங்குகிறது.

“கடன் வசூலிப்பு நிறுவனங்களின் பட்டியலே எங்களிடம் இருகிறது. ஆனால், அவர்களை இன்னும் பயன்படுத்திக்கொள்ளவில்லை…….தப்புத் தவறாக நடந்துகொள்வார்களோ என்று அஞ்சுகிறோம்.

“அதனால், நாங்களே முயல்கிறோம். சட்டமுறைப்படி நடந்துகொள்கிறோம். குடிநுழைவுத் துறை மூலமாக (கடனைத் திருப்பச் செலுத்தாதவர்கள்) பெயர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.  வெளிநாடு செல்ல முடியாத அவர்கள் எங்களைத் தேடி வருகிறார்கள். அவர்களிடம் அவர்கள் பற்றிய ஆகக் கடைசி விவரங்களைத் திரட்டி வைத்துக்கொள்கிறோம்”, என்றார்.

கடும் நடவடிக்கை எடுக்க விருப்பமில்லை

இந்த முறை ஓரளவுக்குத்தான் வெற்றியளித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 130,000 சொச்சம் பேரில் 20விழுக்காட்டினர் மட்டுமே அவர்களின் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

“மற்றவர்கள் இன்னும் முன்வரவில்லை. காத்திருக்கிறோம்”, என்று அகோஸ் தெரிவித்தார்.

கடனைத் திரும்பப் பெறும் முயற்சியாக, கடனாளிகள் வங்கிகளில் வர்த்தகக் கடன்கள் பெறுவதைத் தடுத்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளில் இறங்க பிடிபிடிஎன் விரும்பவில்லை.

ஏற்கனவே, புதிய பட்டதாரிகள், வேலைக்குச் சேர்ந்து பெறும் குறைந்த சம்பளத்தில் செலவுகளைச் சரிக்கட்டவே சிரமப்படும் வேளையில் அவர்களைக் கசக்கிப் பிழிந்து பணத்தைக் கறக்க முயலும் கடன் முதலைபோல அந்நிறுவனம் செயல்படுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம், நாடு முழுவதிலுமிருந்து வந்த மாணவர்கள் டாட்டாரான் மெர்டேகாவில் முகாமிட்டு பிடிபிடிஎன் கடன்களை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அக்கடன்களுக்கு வட்டி விதிக்கப்படுவது ஏன் என்றும் அவர்கள் வினவினர்.

ஒரு நேரம், கடன்களுக்கு மூன்று விழுக்காடுவரை வட்டி(அல்லது நிர்வாகக் கட்டணம்) விதிக்கப்பட்டது. ஆனால், 2008-இல் உஜ்ரா திட்டத்தில் சேர்ந்துகொண்டவர்களுக்கு ஒரு விழுக்காடு வட்டி செலுத்தினால் போதும் என்ற சலுகை கிடைத்தது.

ஆனால், எத்தனை பேர் அத்திட்டத்தில் சேர்ந்தனர் என்பது தெரியவில்லை. ஏனென்றால், அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஈராண்டுகள் ஆன பின்னரும் 800,000 கடனாளிகள் மூன்று விழுக்காடு வட்டிதான் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கல்விக்கடனில் அரசியல்

இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வதில் குறியாக இருக்கும் மாற்றரசுக் கட்சி, இலவசக் கல்வி என்ற இயக்கத்தை இப்போது இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. தனது 2013 மாற்று பட்ஜெட்டில் பிடிபிடிஎன் கடன்களை இரத்துச் செய்யும் திட்டத்தை அது அறிவித்துள்ளது.

இதனிடையே, தலைமைக் கணக்காய்வாளர் 2010 கணக்கறிக்கையில் கடன்களைத் திரும்பப் பெறும் முயற்சிகள் திருப்திகரமாக இல்லை என்று குறைகூறியதை அடுத்து கடன்களில் 70 விழுக்காட்டையாவது திரும்பப் பெறுவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பிடிபிடிஎன் தலைவர் இஸ்மாயில் முகம்மட் சைட் கூறினார். ஆனால், அதன் புதிய தரவுதளம் முழுமையாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இப்புதிய தரவுதளம், நிதி அமைச்சின் துணை நிறுவனமான புரோஹாஸ் சென்.பெர்ஹாட்டின் குளறுபடிகளுக்குப் பின் உருவாக்கப்பட்டது என்றும் 2014-இல் அது முழுமை பெறும் என்றும் அகோஸ் சொன்னார். ஆனால், இப்போதே அது செயல்படும் தரத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை, வரவேண்டிய ரிம7.83பில்லியனில் ரிம 3..48 பில்லியன் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 49.07 விழுக்காடுதான். வங்கிகளில் இப்படி நடந்திருந்தால் அபாய மணி அலறத் தொடங்கி இருக்கும்.

ஆனால், வணிக-நோக்கம்-அற்ற பிடிபிடிஎன்னை வர்த்தக வங்கிகளுடன் ஒப்பிடல் சரியல்ல என்கிறார் அகோஸ்.

அரசாங்கமும் பிடிபிடிஎன் தொடர்ந்து நிலைத்திருக்க தேவையான ஆலோசனைகள் தெரிவிக்க அனைத்துலக ஆலோசகர்களை அமர்த்தியுள்ளது.

பிடிபிடிஎன், நிலைமையச் சரிக்கட்ட பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விக்கு தேசிய கல்விச் சேமிப்புத் திட்டத்தில் (எஸ்எஸ்பின்) பணம் சேமிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறது.

அதன் தொடர்பில் பிடிபிடிஎன் கடனுக்கு மனுச் செய்வோர் அவர்களின் பெயர்களில் அவர்களின் பெற்றோர்கள் எஸ்எஸ்பிஎன்னில் கணக்கு திறந்திருந்த வேண்டும் என்றுகூட நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், பிடிபிடிஎன் அகப்பக்கத்தைப் பார்க்கும்போது  இப்போது அது தேவையில்லை என்று தெரிகிறது.

கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகள்

ஆனாலும், எஸ்எஸ்பிஎன் மூலமாக பிடிபிடிஎன் கடன்களைச் சரிக்கட்டும் முயற்சி அடியோடு கைவிடப்படவில்லை. அண்மைய பட்ஜெட்டில்  எஸ்எஸ்பிஎன் சேமிப்புக்கு வரிவிலக்கு ரிம6,000வரை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருப்பதே இதற்குத் தக்க சான்று.

இதனிடையே, வசூபிப்பில் கவனம் செலுத்த கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என அகோஸ் தெரிவித்தார்.

“இப்போது 18,000 கடனாளிகளுக்கு ஒரு அதிகாரி பொறுப்பாக இருக்கிறார். அதை 15,000 பேருக்கு ஒருவர் என்று ஆக்க விரும்புகிறோம்”, என்றார்.

பிடிபிடிஎன்னில் இப்போது 1,500பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் நிரந்தர பணியாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்த பணியாளர்கள்.

பிடிபிடிஎன், கடனை முறையாக திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்குத் தள்ளுபடி கொடுக்கிறது. ஒரே தவணையில் முழுக் கடனையும் திருப்பிக் கொடுத்தால் 10 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும்.

பிடிபிடிஎன்னில் கடன் வாங்கியுள்ள 2 மில்லியன் பேரில் 70 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு வகையில் பணத்தைத் திருப்பிச் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முறையாக திருப்பிச் செலுத்துவோர்.

எஞ்சியோர், “இந்த மாதம் கொடுப்பார்கள், அடுத்த மாதம் கொடுக்க மாட்டார்கள். கொடுக்கும்போது அந்த மாதத்துக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்க மாட்டார்கள்”, என்று அகோஸ் கூறினார்.