பிஎன் மத்திய அரசாங்கத்தால் வாக்குறுதி அளித்தபடி கிள்ளானில் பாலம் கட்டித்தர முடியாமல் போனதற்கு அது சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்படாததுதான் காரணமாகும் என்று சிலாங்கூர் மாற்றரசுக் கட்சித் தலைவர் சதிம் டிமான் இன்று விளக்கினார்.
மாநில பக்காத்தான் அரசு “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று சதிம் (இடம்) திரும்பத் திரும்ப இடித்துரைத்ததைத் தொடர்ந்து சுஹாய்மி ஷாபி (பிகேஆர்-ஸ்ரீமூடா), பிஎன் வாக்குறுதி அளித்த பாலம் என்னவாயிற்று என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“அக்கேள்விக்குப் பதில் அளிக்கவே சிரமமாக இருக்கிறது… சிலாங்கூர் மக்கள் பிஎன்னைத் தேர்ந்தெடுத்திருந்தால் அது (பாலம்) நீண்ட காலத்துக்கு முன்பே கட்டப்பட்டிருக்கும். பிரச்னை என்னவென்றால், நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை”, என்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சதிம் குறிப்பிட்டார்.
அது ஒரு மத்திய அரசுத் திட்டம், பிஎன்தான் மத்திய அரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சுஹாய்மி சுட்டிக்காட்டியதற்கு சதிம் அதை மறுத்து மாநில அரசுதான் பாலம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தது என்றார்.
“அப்போது சிலாங்கூரில் பிஎன் ஆட்சியில் இருந்தது. அதனால் (மாநிலத்தில்) வென்றால் பாலம் கட்டுவோம் என்றோம். ஆனால் தோற்றுப்போனோம்.
“எங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கும். அவ்வளவுதான். இப்போதுகூட சிலாங்கூரை பிஎன்னிடம் திருப்பிக் கொடுங்கள். செய்து காட்டுகிறோம்”, என்றவர் சவால் விடுத்தார்.
நேற்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்த சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், கிள்ளானுக்கு மூன்றாவது பாலம் கட்டித்தருவதற்கு “பிஎன் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற” மாநில அரசு, அதன் ரிம2.2பில்லியன் கையிருப்பிலிருந்து ரிம300 மில்லியனைச் செலவிடும் என்று அறிவித்திருந்தார்.
முன்னதாக சதிம், பக்காத்தான் அரசு, 2008 தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி ரொக்கம் அன்பளிப்புச் செய்யும் எட்டுத் திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
“அதை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். ரிம2.4 பில்லியன் மதிப்புள்ள திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவெற்றும் நிதி வசதி மாநில அரசுக்கு இல்லை என்பதையும் அறிவோம்.
“எனவே, மக்கள் இரண்டாவது தடவையும் ஏமாந்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.