பத்து மலை இந்து கோயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய 29-மாடி கொண்டோமினிய திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை என்றால், டிஏபி சகாவும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோனி லியு பதவி துறப்பாரா என்று ஒரு கேள்வியைப் போட்டு எம். மனோகரன் (டிஏபி- கோத்தா ஆலம் ஷா) மாநிலச் சட்டமன்றத்தில் பரபரப்பை உண்டாக்கினார்.
“அத்திட்டம் நிறுத்தப்படவில்லை என்றால் நீங்கள் பதவி விலகத் தயாரா? ஏனென்றால் அது இந்து சமயத்துக்கு மிரட்டலாக விளங்கும் ஒரு திட்டம். அந்தக் குகைகள் பல மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. பத்து மலை கோயில் நூறு ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது”. இன்று பிற்பகல் சிலாங்கூர் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மனோகரன் இவ்வாறு பேசினார்.
அதற்குப் பதிலுறுத்த லியு (மஞ்சள் சட்டை அணிந்தவர்), அத்திட்டத்தை நிறுத்தப்போவதாக மாநில அரசு அறிவித்து விட்டது எனவே தாம் பதவி விலகும் விவகாரம் தேவையற்றது என்றார்.
“அத்திட்டம் பற்றி விளம்பரப்படுத்தப்பட்டு 60 விழுக்காடு வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, ஒழுங்குமுறையாக, நியாயமான காரணங்களை முன்வைத்துதான் அதை நாம் நிறுத்த வேண்டும்.
“அவ்வாறு செய்யும்போது மாநில அரசு அல்லது மத்திய அரசு இழப்பீடு கொடுக்க வேண்டி வரலாம். ஆக, அதைச் சரியாகவும் முறையாகவும்தான் செய்ய வேண்டும்.
“எனவேதான், அவ்விவகாரத்தைக் கவனிக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
“அப்படியிருக்க, பதவிவிலகும் விவகாரம் தேவையற்றது. திட்டங்கள் (பாரம்பரிய சொத்துகளுக்கு) மிரட்டலாக விளங்கக்கூடாது என்பதுதான் பக்காத்தானின் நிலைப்பாடாகும்”, என்றார்.
முன்னதாக, லியு, பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரில் வெற்றிபெற்றால் அத்திட்டம் இரத்துச் செய்யப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தீபாவளி உபசரிப்பில் கலந்துகொள்ள பத்து மலைக்கு வருகை புரிந்தபோது அவ்வாறு சொல்லியிருந்தார்.
“நாங்கள் எதைச் செய்தாலும் ஒழுங்குமுறையாக செய்ய நினைக்கிறோம். எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள்போல் நியாயமான காரணமின்றி இரத்து செய்வோம் என்று கூறுவதில்லை.
“பிரதமரும் அவரின் அமைச்சரும் அத்திட்டத்தை இரத்துச் செய்ய உளப்பூர்வமாகவே விரும்பினால், (மத்திய அரசின்) அதிகாரத்தைப் பயன்படுத்தி மேம்பாட்டாளரின் உரிமத்தை மீட்டுக்கொள்ளலாம் அல்லது விற்பனை உரிமத்தை இரத்து செய்யலாமே”, என்றார் லியு.