தங்கள் முன்னோர்களின் புதைகுழிகளை இடமாற்றும் நடவடிக்கையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் பற்றி பெங்கேராங் குடியிருப்பாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் (பிசி) ஊடகங்களிடம் பேச முயன்றபோது அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
அங்கிருந்து நகர மறுத்த என்ஜிஓ-தலைவர் சிம் செங் சானை நாடாளுமன்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
“இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிய ஒரு இடம்”, என்று காவலர்கள் சிம்மிடம் (படத்தில் இடப்பக்கம் இருப்பவர்) கூறினர்.
நாடாளுமன்றத்தின் குறிப்பிட்ட இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்-அல்லாதார் செய்தியாளர் கூட்டம் நடத்த மக்களவைத் தலைவர் விதித்துள்ள தடையை அமல்படுத்துவதில் முனைப்பாக இருந்த காவலர்கள் பிறகு, யா லாய் யென்னையும் அதேபோல் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது டிஏபியின் பக்ரி எம்பி எர் டெக் ஹுவா (படத்தில் நடுவே இருப்பவர்) இடையில் புகுந்து தடுத்தார்.
“அவர் ஒரு பெண். அவரை நீங்கள் தொடக் கூடாது”, என்று காவலர்களிடம் அவர் சொன்னார்.
பின்னர், சிம்மும் யாப்பும் செய்தியாளர் கூட்டத்துக்குரிய இடத்துக்கு அப்பால் சென்று அங்கு செய்தியாளர்களிடம் பேச முயன்றனர். அப்போதும் காவலர்கள் குறுக்கிட்டனர்.
“இதுவும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட இடம்தான்”, என்று ஒரு காவலர் கூற, செய்தியாளர்கள் தலையிட்டு அவைத் தலைவரின் தடை குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும்தான் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். அதைக் கேட்டு காவலர்கள் அகன்றனர்.
120 நடுகற்கள் 120 ஆண்டுகள் பழமையானவை
கல்லறைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையைத் தடுக்க கையெழுத்து சேகரிக்கும் இயக்கமொன்று அடுத்த மாதம் தொடங்கும் என்று சிம் கூறினார்.
“மலேசிய மக்கள் எங்கள் முயற்சிக்கு உதவ வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
பெங்கேராங் என்ஜிஓ கூட்டணி அப்பகுதியில் நடத்திய ஓர் ஆய்வில், பெட்ரோகெமிகல் திட்டத்துக்கு இடம்கொடுப்பதற்காக அங்குள்ள ஐந்து மயானங்களிலிருந்து 1566 கல்லறைகள் அப்புறப்படுத்தப்படும் எனத் தெரிய வந்துள்ளதாக யாப் கூறினார்.
அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை என்ஜிஓ-கள் அடையாளம் கண்டிருப்பதாகவும் யாப் கூறினார். அங்கு கல்லறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 60 நடுகற்கள் 120 ஆண்டுகளுக்குமேல் பழமையானவை.
அரசாங்கம், அப்பகுதி மக்களுக்கு கல்லறைகள் அகற்றப்படுவது பற்றித் தெரியப்படுத்தியுள்ளது. ஆனால், அது எப்போது நடக்கும் என்பதோ கல்லறைகள் எங்குக் கொண்டுசெல்லப்படும் என்பதோ சொல்லப்படவில்லை. இழப்பீடு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனல், எவ்வளவு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
“உலு திராம்- தேசா ரூ நெடுஞ்சாலை அமைப்பதற்கு சில கல்லறைகள் மட்டும் அப்புறப்படுத்தன. ஆனால், பெங்காராங்கில் எல்லாக் கல்லறைகளும் அகற்றப்படுவது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்…..
“பெங்காராங் கல்லறைகளை அகற்ற இடமளித்தால், பிறகு நாட்டில் உள்ள மற்ற கல்லறைகளும் இதேபோல் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்படும்”, என்றார்.