‘மறைக்கப்பட்ட கூட்டரசுக் கடன் பெருகுவதை மதிப்பீட்டு நிறுவனம் மெய்பித்துள்ளது’

கூட்டரசு அரசாங்கம் தனது கடன்களை அதிகாரத்துவ ஐந்தொகைக் கணக்கிலிருந்து ( balance sheet ) மறைப்பதற்கு முயற்சி செய்வதை Fitch Ratings என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை உறுதி செய்வதாக டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறுகிறார்.

கூட்டரசு அரசாங்கம் நாட்டின் கடன் அளவு குறித்த எச்சரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும் அல்லது ‘கிரீஸ் பாணியிலான நிதி நெருக்கடியை’ நோக்கி நாடு மெதுவாக செல்லக் கூடிய அபாயத்தை எதிர்நோக்க வேண்டும் என புவா சொன்னார்.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட Fitch Ratings அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் அவ்வாறு கூறினார்.

‘மலேசியப் பொது நிதிகள் பலவீனமாக இருப்பதால் அவை போதுமான அளவுக்கு நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலையில் இல்லை,” என அந்த அறிக்கை எச்சரித்தது.

“அது இவ்வாண்டு மூன்றாவது கால் பகுதியில் ஆண்டு அடிப்படையில் 5.2 விழுக்காடாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பொதுத் துறை பங்காற்றுவதற்குத் தடையாக இல்லை என்றாலும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் பெறும் உத்தரவாதக் கடன்கள் கவலை அளிக்கிறது,” என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

அரசாங்கப் பயனீடும் முதலீடும் விரும்பப்படும் அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் அந்த வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது என அந்த அறிக்கை குறிப்பிடுவதாக புவா சொன்னார்.

பொதுத் துறை நிறுவனக்கள் கூட்டரசு அரசாங்க உத்தரவாதத்துடன் பெறப்பட்ட கடன்கள் அரசாங்க நிதிச் செலவுகளுக்கு உதவின என்பதே அதன் பொருளாகும். பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவாக அத்தகைய

நிதிக் கொள்கையைப் பின்பற்றுவது நாட்டின் கடன் அளவு மீது மேலும் நெருக்குதலை ஏற்படுத்தும் என Fitch Ratings கூறியது.

“அரசாங்கக் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காடாக மட்டுமே இருப்பதாக அதிகாரத்துவ புள்ளி விவரங்கள் காட்டினாலும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் கடன்கள் அல்லது முக்கியமில்லாத கடன்கள் அதில் சேர்க்கப்படவில்லை,” பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி நேற்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

2011 டிசம்பர் மாதம் வரையில் மலேசியாவின் முக்கியமில்லாத கடன்கள் அளவு 116.8 பில்லியன் ரிங்கிட் ஆகும். அது முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.5 விழுக்காடு அதிகமாகும்.

“ஆனால் அந்த அளவு 2012 செப்டம்பர் மாதம் வரையில் மேலும் 20 விழுக்காடு அதிகரித்து 140.2 பில்லியன் ரிங்கிட் ஆகியுள்ளது. அந்தக் கடன் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காடு ஆகும். 2008 இறுதியில் அது 9 விழுக்காடாக இருந்தது.”

ஆகவே அந்த ஆண்டுகளில் கூட்டரசு அரசாங்கக் கடன்கள் 10 முதல் 12 விழுக்காடு வரையில் உயர்ந்ததைக் கருத்தில் கொண்டால் முக்கியமில்லாத கடன்கள் அதிகரிப்பு விகிதம் மிகவும் அதிகமாகும். அதிகாரத்துவ ஐந்தொகைக் கணக்கிலிருந்து தனது கடன்களை மறைக்க அரசாங்கம் முயலுவதை அது தெளிவாகக் காட்டுகின்றது,”என புவா குறிப்பிட்டார்.

ஐந்தொகைக் கணக்கில் காட்டப்படாத கடன்கள் அதிகரிப்பது கூட்டரசுக் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற உச்ச வரம்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் கடன் நிலைமை குறித்து கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெளிவான தோற்றம் கிடைக்கும் பொருட்டு பொதுக் கடன்களைக் கணக்கிடும் போது கூட்டரசு அரசாங்கம் தான் உத்தரவாதம் அளித்துள்ள கடன்களில் எஞ்சியுள்ள தொகையையும் சேர்க்க வேண்டும் என அண்மையில் சிஐஎம்பி முதலீட்டு வங்கி பொருளாதார நிபுணர் லீ ஹெங் குவி கூறியதை புவா சுட்டிக் காட்டினார்.

அரசாங்கம் காலத்துக்கு ஒவ்வாத ‘ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட நிதிகள்’ என்னும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மறைவாக உள்ள அந்தக் கடன்களை கூட்டரசு அரசாங்கக் கடன் கடப்பாடுகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அந்தக் கடன்களில் பெரும்பகுதி வர்த்தகம் சாராத திட்டங்களுக்காகும். ஏதாவது ஒரு கட்டத்தில் அரசாங்கம் அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். பிடிபிடிஎன் கொடுக்க வேண்டிய 24 பில்லியன் ரிங்கிட்டும், Syarikat Prasarana Negara கொடுக்க வேண்டிய 11 பில்லியன் ரிங்கிட் கடனும் முக்கியமில்லாத கடன்களில் அடங்கும்.”

“அத்துடன் அரசாங்கம் 50 பில்லியன் ரிங்கிட் பெறும் எம்ஆர்டி திட்டத்தில் (அதற்கு இன்னும் தேவையான நிதி பெறப்படவில்லை) இறங்கவிருக்கிறது. ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடங்கியுள்ள 25 பில்லியன் ரிங்கிட் பெறும் துன் ரசாக் பரிவர்த்தனை மய்யம் ஆகிய ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட மெகா திட்டங்களும் இருக்கின்றன,” என்றார் அவர்.

முழுமையாக அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் கடன் உத்தரவாதங்களை வழங்குவதின் மூலம் 55 விழுக்காடு வரம்பை நடப்பு அரசாங்கம் மீறுவது உண்மையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். அந்த நிலை விரைவாகவோ பின்னரோ மலேசியாவை நிதி நெருக்கடிக்குள் கொண்டு சென்று விடும் என புவா எச்சரித்தார்.