நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் அந்தப் பிள்ளைகளுடைய குடும்பங்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படுவது மீது முறையாகப் புகார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களை கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கேட்டுக் கொண்டுள்ளார்.
“அந்த விவகாரம் மீது எனக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. அதிருப்தி அடைந்துள்ள பெற்றோர்கள் அமைச்சுக்கு புகார் செய்ய வேண்டும் என நான் யோசனை கூறுகிறேன். பின்னர் நாங்கள் அதனை விசாரிக்க முடியும். நாங்கள் அந்த விவகாரம் மீது சமரசம் செய்து கொள்வது கிடையாது.”
“நடந்ததாகக் கூறப்படுவது லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும். யாரும் அவ்வாறு பணம் கொடுக்க முன் வரக் கூடாது. உண்மையில் ஆசிரியர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும்.”
“அது நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்றும் புவாட் தெரிவித்தார்.
மாணவர்களுடைய கன்னத்தில் அறைவதற்கு அமைச்சு அனுமதி அளிக்கவில்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என புவாட் மேலும் சொன்னார்.
பெற்றோர்களுடைய கூற்றை ஆராயுமாறு அவர் கிளந்தான் கல்வித் துறைக்குப் பணித்தார்.
பணம் கொடுக்க முன் வந்தது நிராகரிக்கப்பட்டது
நவம்பர் 7ம் தேதி ஹசான் அச்சோய் குடும்பத்தினர் அணுகப்பட்டதாகவும் போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு பிள்ளைக்கு 300 ரிங்கிட் கொடுக்க முன் வந்ததாகவும் பிஹாய் தேசியப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் ஏற்கனவே கூறியுள்ளார்.
நவம்பர் 7ம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் அவ்வாறு அணுகப்பட்டதாகவும் ஆனால் குடும்பங்கள் பணம் கொடுக்க முன் வந்ததை நிராகரித்து விட்டதாகவும் அவர் சொன்னார்.
ஹசானின் 12 வயது புதல்வியும் இதர மூன்று ஆறாம் வகுப்பு மாணவிகளும் (அனைவரும் முஸ்லிம் அல்லாதார்) உணவுக்கு முன்னர் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
அந்தச் சம்பவத்தை கல்வித் துணை அமைச்சார் வீ கா சியோங் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
தவறு செய்த ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ‘எடுக்கப்பட்டு வருவதாக’ அவர் சொன்னார்.
பெற்றோர்களுடைய முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஒராங் அஸ்லி பிள்ளையையும் சமயப் போதனைகளைப் பெறுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என 1954ம் ஆண்டுக்கான பழங்குடி மக்கள் சட்டத்தின் 17வது பிரிவு கூறுகின்றது.
அதனை மீறுகின்ற யாருக்கும் 500 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 17(3) தெரிவிக்கின்றது.
பிஹாய் தேசியப் பள்ளி கிளந்தான் பேராக் எல்லையில் குவா மூசாங் உட்புறப் பகுதியில் ஒராங் அஸ்லி பிள்ளைகளுக்காக இயங்கும் சிறப்புப் பள்ளிக்கூடமாகும்.