டோங் ஜோங் எனப்படும் மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் 2013-2025 தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு சமூகத்தின் ஆதரவு பெருகி வருகிறது.
பெட்டாலிங் ஜெயாவில் நிகழும் அந்தப் பேரணிக்கு தங்கள் பேராளர்களை அனுப்புவதாக 580க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் வாக்குறுதி அளித்துள்ளன.
அந்த அமைப்புக்களின் பேராளர்கள் பேரணியில் உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவர் என டோங் ஜோங் தலைவர் யாப் சில் தியான் கூறினார்.
அந்த கல்விப் பெருந்திட்டம் மீது தங்களுடைய கவலையை தெரிவிக்க அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.
அந்தப் பேரணிக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து சீனப் பள்ளிக்கூடங்களின் இயக்குநர்கள் வாரியங்களுக்கு டோங் ஜோங் விளக்கமளித்து வருகின்றது.
அந்தப் பேரணியில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை பிரதமரிடமும் கல்வி அமைச்சரிடமும் சமர்பிக்கப்படும் என யாப் சொன்னார்.
பெட்டாலிங் ஜெயாவில் Amcorp Mall -க்கு எதிரில் உள்ள பாடாங் தீமோரில் பேரணி தொடங்கும்.
பேரணிக்கு ஆதரவு பெருகுவதைத் தடுக்க அரசாங்கம் அந்த பெருந்திட்டத்தில் சிறிய திருத்தங்களைச் செய்து அல்லது வெற்று வாக்குறுதிகளை வழங்கி பேரணியை சீர்குலைப்பதற்கு அரசாங்கம் முயலும் என யாப் எதிர்பார்க்கிறார்.
“அந்த சதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு விழிப்புடன் இருக்குமாறு டோங் ஜோங் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.”
கடந்த காலத் திட்டம் மீண்டும் உயிர் பெறுகின்றது
மலாய் மொழியை போதானா மொழியாகக் கொண்ட ஒரே கல்வி முறையை வலியுறுத்தும் 1956 ரசாக் அறிக்கையை அமலாக்கும் நோக்கத்துடன் மாணவர்களிடையே ஆங்கில, மலாய் மொழித் தேர்ச்சியை மட்டும் மேம்படுத்துவதே கல்விப் பெருந்திட்டத்தின் உண்மையான நோக்கம் என யாப் கூறிக் கொண்டார்.
அந்தத் திட்டம் அமலாக்கப்பட்டால் சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகளில் மலாய் மொழியைப் பயன்படுத்தும் வகுப்புக்கள் அதிகரிக்கும். அதனால் அவற்றின் அடையாளங்கள் மாறும். சுயேச்சை சீன உயர் நிலைப்பள்ளிகள், மக்கள் சமயப் பள்ளிகள் ஆகியவை ஒரங்கட்டப்படும் என டோங் ஜோங் எச்சரித்துள்ளது.
நாட்டு வளர்ச்சியில் தாய்மொழிப் பள்ளிகள் ஆற்றியுள்ள பங்கை அந்தத் திட்டம் புறக்கணித்துள்ளது என்றும் பல்வேறு போதானா மொழிகளைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் அரசாங்க வளங்கள் நியாயமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றும் அது கூறிக் கொண்டுள்ளது.
டிஏபி அந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அதற்கு தனது உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டவும் உறுதி அளித்துள்ளது.
இதனிடையே டோங் ஜோங் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு வழி வகுக்கக் கூடிய பேரணிகளை நடத்துவதற்குப் பதில் தனது குறைகளைத் தெரிவிக்க சரியான வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என ஜிபிஎம்எஸ் என்ற தீவகற்ப மலேசிய மலாய் மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
“பேச்சு சுதந்திரத்தை சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அளவுக்கு தவறாகப் பயன்படுத்த வேண்டாம்,” என அதன் தலைவர் ஜயிஸ் அப்துல் கரீம் கூறினார்.
அத்துடன் பேரணிக்கு குறிக்கப்பட்டுள்ள நேரமும் சந்தேகத்தை அளிக்கிறது. ஏனெனில் நாடு தற்போது அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது என்றார் அவர்.