சுவாராம்: அனுமதி உண்டோ இல்லையோ பிரெஞ்ச் வழக்குரைஞர்கள் வருவது உறுதி

ஆளும் கட்சித் தலைவர்கள் அனுமதி அளிக்கத் தயங்கினாலும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் இரு வழக்குரைஞர்கள் மலேசியா வர முயல்வார்கள்.

அவர்களின் விளக்கமளிப்பு “நிச்சயம் உண்டு” என்று கூறிய சுவாராம் இயக்குனர் சிந்தியா கேப்ரியல், நவம்பர் 29-இல், நாடாளுமன்றக் கூட்டம் முடிவடைவதற்குள் அவர்கள் வந்து சேர்வார்கள் என்றார்.

ஆனால், என்று வருவார்கள் என்பதை அவரால் உறுதிப்படுத்த இயலவில்லை. இப்போதைக்கு அவர்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

அந்த விளக்கமளிப்புக்கு இடமளிப்பது நாடாளுமன்றத்தின் “கெளரவத்துக்கு இழுக்கு”என்று தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் லத்திப் கூறியிருப்பதை அடுத்து சுவாராம் இவ்வாறு அறிவித்துள்ளது.

அவ்விரு வழக்குரைஞர்களும் பிரான்சில், டிசிஎன்எஸ் நிறுவனம் மலேசியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் விற்றது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணையில் சுவாராமை பிரதிநிதிக்கிறார்கள்.

அக்கொள்முதல் விவகாரத்தில் கையூட்டு வழங்கப்பட்டிருக்கலாம் என்பது சுவாராமின் வாதம். கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் பிரான்சில் குற்றமாகும்.

வில்லியம் போர்டன், ஜோசப் பிரெஹெம் ஆகிய அவ்விரு வழக்குரைஞர்களும் இன்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அழைப்பின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதாக இருந்தது.

இருவரின் பயணத்துக்கு உத்தரவாதமளிக்க இயலாது என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறிவிட்டதால் அவர்களின் வருகை ஒத்தி வைக்கப்பட்டது.

TAGS: