இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் இன்று கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின.
ஒருவேளை, போர்க்குற்றவாளி ராஜபக்சே மலேசியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டால், வருகின்ற 4-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை எதிர்த்து பெரும் அளவிலான முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இப்போராட்டத்திற்கு உணர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று கிள்ளானில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல். சேகரன் கூறினார்.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு அனைத்துலகப் போர் விதிமுறைகளை மீறி 40,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து மனித இனத்துக்கெதிரான போரை நடத்தியதோடு மட்டுமன்றி, அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை, தமிழர்கள் வாழும் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறிய சேகரன், நமது பிரதமர் நஜிப் அவர்கள் இம்மண்ணில் வாழும் 16 இலட்சம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே இந்நாட்டுக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்பதோடு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
ஆகவே, இப்படி அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே இந்நாட்டுக்குள் கால் பதிப்பதை வன்மையாக கண்டிப்பதோடு; மனித உரிமையை மதிக்கும் அனைத்து மலேசியர்களும் கட்சி, மொழி, இன பேதங்களின்றி போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றுகூடவேண்டும் என்று முன்னாள் நகராண்மைக் கழக உறுப்பினருமான சேகரன் கேட்டுக்கொண்டார்.
– ராஜபக்சேவுக்கெதிரான முற்றுகை போராட்டம் குறித்த தகவல்களை பெற 016-2510752 என்ற எண்ணில் எல். சேகரனை தொடர்பு கொள்ளவும்.