உள்துறை அமைச்சு ஸ்பீட் கேமிராக்களுக்கு 10 மடங்கு கூடுதலாக விலை கொடுத்தது

அமெரிக்காவில் உள்ள மூன்று மாநிலங்களின் அரசாங்கங்களுக்கு விநியோகிப்பாளர்கள் வழங்கிய லேசர் கேமிராக்களுக்கான மதிப்பீட்டு விலைப் பட்டியலுடன் ( Quotations ) ஒப்பிட்டால் உள்துறை அமைச்சு அந்த கேமிராக்களுக்கு 10 மடங்கு கூடுதலாக விலை கொடுத்திருக்க வேண்டும் என பாஸ் பொக்கோக் செனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமார் இன்று மக்களவையில் கூறினார்.

2011 அக்டோபருக்கும் 2012 ஜனவரிக்கும் இடையில் பெறப்பட்ட Delaware, Idaho, Montana ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட விலைப் பட்டியலை மேற்கோள் காட்டிய  அவர், கூடுதல் விலை கொடுக்கப்பட்டதற்கான விளக்கத்தை அமைச்சர் வழங்க வேண்டும் என்றார்.

Montana மாநிலத்துக்கு 4,995 டாலரும் ( 15,292.59 ரிங்கிட் ) Idaho -வுக்கு 5,057.44 டாலரும் (15, 483.84 ரிங்கிட்)  Laser Trucam கேமிரா ஒன்றுக்கு விலைகள் கூறப்பட்டன. அதே வேளையில் Delaware மாநிலத்துக்கு  Laser Digicam கேமிரா ஒன்றுக்கு 6,378 டாலர் (19,526.88 ரிங்கிட்) எனக் கூறப்பட்டது.

அந்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பின்னர் மலேசியாகினிக்குக் கிடைத்தன.

மொத்தம் 75 Laser Digicam ரக கேமிராக்களுக்கு தலா 173, 925 ரிங்கிட்டை அமைச்சு செலுத்தியது  என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் பாஸ் ஜெராய் உறுப்பினர் தொடுத்த கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறினார்.

39 Laser Trucam ரக கேமிராக்களுக்கு 223,500 ரிங்கிட்டையும் அமைச்சு கொடுத்தது.

1995ம் ஆண்டு தொடக்கம் போலீசாருக்கு ஸ்பீட் கேமிராக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது வரை மொத்தம் 124 கேமிராக்கள் கொடுக்கப்பட்டன என்று அவர் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.