அரசு சாரா அமைப்புக்கள் வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள ஹிம்புனான் பாரிசான் சத்து மலேசியா நிகழ்வுக்கு அம்னோவுடனோ அல்லது எதிர்வரும் அம்னோ பொதுப் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என அந்த நிகழ்வின் செயலகத் தலைவர் அகமட் மஸ்லான் இன்று கூறியிருக்கிறார்.
அந்த பேரணிக்கான தேதி தற்செயலானது என்றும் அரசு சாரா அமைப்புக்களின் கூட்டம் அதை விடப் ‘பெரியது’ என்றும் பிரதமர் துறை துணை அமைச்சரான அகமட் சொன்னார்.
“அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ஒட்டி அது நடத்தப்படுவதாக நீங்கள் சொல்லக் கூடாது. ஏனெனில் அந்தப் பேரணி வரும் சனிக்கிழமை நிகழ்கின்றது. அதே வேளையில் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
“நாங்கள் சில காலமாகவே அத்தகையை பேரணியை நடத்துவது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். அதனை நடத்துவதற்கு இந்த சனிக்கிழமை தான் பொருத்தமாக இருந்தது,” என்றும் அகமட் சொன்னார்.