தேசியப் பதிவுத் துறை சபாவில் பின் அல்லது பிந்தி என்ற சொற்களைத் தங்களது பெயர்களில் கொண்டுள்ள கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் என அவர்களுடைய அடையாளக் கார்டுகளில் விருப்பம் போல் குறிப்பது கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ளது.
தேசியப் பதிவுத் துறை அதனைச் செய்யக் கூடாது என MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“சபாவில் பின் அல்லது பிந்தி என்பது முஸ்லிம்களைக் குறிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்ற வரலாற்றுப்பூர்வ நிலையை தேசியப் பதிவுத் துறை கருத்தில் கொள்ள வேண்டும் என MCCBCHST கூறியது.
தேசியப் பதிவுத் துறையின் நடவடிக்கை சம்பந்தப்பட்ட நபர்களுடைய அரசமைப்பு உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் மீறுகின்றது என்றும் MCCBCHST தெரிவித்தது.
“அத்துடன் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை எனக் கூறும் ஷாரியா நீதிமன்ற ஆணையை அவர்கள் பெறும் வரையில் பூமிபுத்ரா கிறிஸ்துவர்களை முஸ்லிம்கள் எனத் தான் தொடர்ந்து பட்டியிடப் போவதாக அந்தத் துறை கூறியுள்ளது, பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 11(1), 12(4) ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அரசமைப்பு உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் மீறுகிறது,” என சமயங்களுக்கு இடையிலான அந்த அமைப்பு கூறியது.
வழக்கு தவறான நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது
அந்த மன்றம் எடுத்துக்காட்டுக்கு சபாவைச் சேர்ந்த இந்திம் பிந்தி லம்பாரானும் அவரது இரண்டு புதல்விகளும் தாக்கல் செய்துள்ள வழக்கை சுட்டிக் காட்டியது.
அவர்களுடைய மை கார்டுகளில் அவர்களை கிறிஸ்துவர்கள் எனக் குறிப்பதற்கு அவர்கள் கிறிஸ்துவர்களாக ஞான ஸ்நானம் பெற்றுள்ளதும் அவர்கள் எந்தச் சமயத்திலும் முஸ்லிம்களாக இருந்தது இல்லை என்பதும் போதுமானவை என அந்த மன்றம் வலியுறுத்தியது.
“அந்த வழக்கில் இந்திம் பிந்தி லம்பாரான், தங்கள் மை கார்டில் கிறிஸ்துவர்களாக குறிக்குமாறு தேசியப் பதிவுத் துறையை கட்டாயப்பட்டுத்தும் பொருட்டு உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ஷாரியா நீதிமன்றத்தில் அல்ல. ஏனெனில் முஸ்லிம் அல்லாதார் மீது ஷாரியா நீதிமன்றத்துக்கு எந்த நீதி பரிபாலன உரிமையும் இல்லை,” என MCCBCHST அறிக்கை தெரிவித்தது.
அந்த வழக்கு இன்னும் குடாட் ஷாரியா உயர் நீதிமன்றத்தில் தேங்கியிருக்கிறது. இந்திம் பெயர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கான பதிவேட்டில் இல்லை என சபா இஸ்லாமிய விவகாரத் துறை நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ள போதிலும் தேசியப் பதிவுத் துறை அவருடைய சமய நிலையை மாற்ற மறுக்கிறது.