கல்வி அமைச்சு எழுத்துப்பூர்வமான பதிலை திருத்தியது

“இப்போது நீங்கள் பார்க்கின்றீர்கள், ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது” என்ற கதை நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தது.

எழுத்துப்பூர்மாக வழங்கப்பட்ட கல்வி அமைச்சு பதில் மீட்டுக் கொள்ளப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது தான் அந்தக் கதை. சீன வாக்காளர்களுடைய எதிர்ப்பைத் தவிர்க்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது.

தனியார் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகள், தனியார் சீனப் பள்ளிகள் ஆகியவற்றை அமைப்பதற்கு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வெவ்வேறு வகையாக பரிசீலிக்கப்பவது குறித்த விளக்கத்தை பாண்டான் எம்பி ஒங் தீ கியாட் கோரியிருந்தார்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கல்வி அமைச்சு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது.

அத்தகைய பள்ளிகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பற்றியும் முன்னாள் மசீச தலைவருமான ஒங் கேள்வி எழுப்பியிருந்தார்.

கல்வி அமைச்சு தனது பதிலில் இதர பல விஷயங்களுடன் சுயேச்சை சீனப் பள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் ‘இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை’ என்றும் காரணம் அவை தேசியப் பாடத்திட்டத்திற்கு ஏற்ற பாடத்திட்ட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியிருந்தது.

நேற்று பிற்பகல் வாக்கில் மலேசியாகினியின் சீன மொழிப் பதிப்பு அந்தச் செய்தியை வெளியிட்டது. அதே வேளையில் பல சீன நாளேடுகள் அந்தச் செய்தியை குறுஞ்செய்தி வழி அண்மைய செய்தியாக அனுப்பின.

வரலாற்றுக் காரணங்கள்

அதனைத் தொடர்ந்து அந்த எழுத்துப்பூர்வமான பதிலின் திருத்தப்பட்ட பிரதியை கல்வி அமைச்சு எல்லாஊடகங்களுக்கும் அனுப்பியது. அதில் சீன தனியார் பள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனக் கூறும் வாசகங்கள் அகற்றப்பட்டிருந்தன.

அதற்குப் பதில் வரலாற்றுக் காரணங்களுக்காக 60 சுயேச்சை சீன உயர் நிலைப் பள்ளிகள் இயங்குவதாக புதிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(இரண்டு பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன)

“1961ம் ஆண்டு கல்விச் சட்டம் அமலாக்கப்பட்டதும் சில இடைநிலைப் பள்ளிகள் தேசிய பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தன. அவை SMJK அல்லது “ஏற்றுக் கொண்ட பள்ளிகள்” என வகைப்படுத்தப்பட்டன. மற்றவை சுயேச்சை சீனப் பள்ளிகளாகின.

“என்றாலும் அந்த சுயேச்சைப் பள்ளிகள் 1996ம் ஆண்டு கல்விச் சட்டத்தின் 151வது பிரிவில் கூறப்பட்டது போல தொடர்ந்து ‘அதே நிலையில்’ இருந்தன.”

“1995ம் ஆண்டு டிசம்பர் 18ல் 1995ம் ஆண்டு கல்வி விதிமுறைகள் மசோதாவைச் சமர்பித்த போது அப்போதைய கல்வி அமைச்சர் நஜிப் அப்துல் ரசாக் ஆற்றிய உரைக்கு ஏற்ப இந்த அறிக்கை அமைகின்றது,” என அது மேலும் கூறியது.

திருத்தப்பட்ட பிரதி எல்லா செய்தி நிறுவனங்களுக்கும் மின் அஞ்சல் வழி அனுப்பப்பட்டது. வழக்கமாக எழுத்துப்பூர்வமான பதிலை நாடாளுமன்றத்தில் உள்ள ஊடக அறையில் மட்டுமே கிடைக்கும் அல்லது எம்பி-க்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் விநியோகம் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான பதில் கல்வி அமைச்சருடைய அலுவலகம் பரிசீலினை செய்யாத முன் வரைவு (நகல்) என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத கல்வி அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆங்கிலத்துக்குச் சரி

நாட்டில் பல சுயேச்சை சீன உயர்நிலப் பள்ளிகளை அமைப்பதற்கு சீனக் கல்விப் போராட்ட அமைப்பானடோங் ஜோங் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் வேளையில் அந்த எழுத்துப்பூர்வமான பதில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது சுயேச்சை இடைநிலைப் பள்ளிகள் ஏதும் இல்லாத குவாந்தானில் அந்த அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ஜோகூர் சிகாமாட்டில் இன்னொரு சுயேச்சைப் பள்ளிக்கு அரசாங்க அனுமதியைப் பெறுவதில் அது இப்போது கவனம் செலுத்தி வருகின்றது.

தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக மலாய் மொழியைப் போதானா மொழியாகப் பயன்படுத்தும் சுயேச்சைப் பள்ளிகளையும் ஆங்கிலத்தை போதானா மொழியாகப் பயன்படுத்தும் அனைத்துலகப் பள்ளிகளையும் அமைப்பதற்கு தொழில் முனைவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவர்களுடைய நிதி நிலைமை, போதிக்கும் ஆற்றல், நிபுணத்துவம், பொருத்தமான  இடம் ஆகியவை பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

என்றாலும் புதிய சுயேச்சை சீனப் பள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் பற்றி அந்தப் பதிலில் நேரடியாக எந்த விவரமும் காணப்படவில்லை.

அந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்பதற்காக ஒங்-குடன் தொடர்பு கொள்ளப்பட்டது. புதிய எழுத்துப்பூர்வமான பதில் ‘குழப்புகிறது’ என்றும் தமது அரசியல் வாழ்வில் இது போன்ற சூழ்நிலையை எதிர்நோக்கியதில்லை என்றும் அவர் சொன்னார். புதிய எழுத்துப்பூர்வமான பதில் மக்களவையில் தாம் அமரும் இருக்கையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஒங் தெரிவித்தார்.