‘மெக்சிஸ்-ஏர்செல் விசாரணையில் நஸ்ரி இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும்’

அரசாங்கம் வெளிநாடுகளுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாகக் கூறிக்கொள்ளும் அப்துல் நஸ்ரி அசீஸ், மெக்சிஸ்-ஏர்செல் விசாரணையில் மலேசியா ஒத்துழைப்புத் தரவில்லை என்று இந்தியா முறையிட்டிருப்பதற்குப் பதில் கூறியாக வேண்டும். 

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எல்லைதாண்டிய ஊழல் விவகாரங்களில் வெளிநாடுகளுடன் அணுக்கமாக ஒத்துழைப்பதாக நஸ்ரி கூறிக்கொள்வதால் இந்தக் குறைக்கூறலுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என்று பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் (இடம்) வலியுறுத்தினார்.

“அண்மையில் இந்திய மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) ஒரு மலேசிய நிறுவனத்தையும் அதில் சம்பந்தப்பட்டுள்ள தனிப்பட்டவர்களையும் விசாரிப்பதற்கு மலேசியாவின் ஒத்துழைப்பு கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் அதன் விளைவாக மொத்த விசாரணையும் முடக்கப்படலாம் என்றும் கூறியிருந்தது”. 
 
இப்படிப்பட்ட முக்கியமான விவகாரங்களில் மெளனமாக இருப்பது  நாம் உலகத்துடன் ஒத்துழைப்பதில்லை என்ற தப்பான கருத்தைத் தோற்றுவித்து விடும் என்று கோபிந்த் கூறினார்.

இந்தியாவின் சிபிஐ, மலேசியாவில் “அரசியல்-பொருளாதாரச் செல்வாக்கு” பெற்றுள்ள ஒரு தொழில் அதிபரால் விசாரணை தாமதம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தது என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இதேபோல், மலேசியாவுக்குள் கடத்தி வரப்பட்ட ரிம40 மில்லியன் “அரசியல் நன்கொடை” மீதான வழக்கை ஹாங்காங் ஊழல் தடுப்பு சுயேச்சை ஆணையம் கைவிட்டதற்கு மலேசிய அதிகாரிகள் ஒத்துழைக்காததுதான் காரணம் என்றும் கூறப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், புதன்கிழமை நஸ்ரி (வலம்), அதை  மறுத்திருந்தார்.

மலேசிய அதிகாரிகள் சிபிஐ கோரும் தகவல்களை அளிக்க மறுத்தால் சிபிஐ விசாரணைக்கும் அதே நிலைதான் ஏற்படும் என்று கோபிந்த் கூறினார்.

“இந்திய செய்தித்தாள்கள், உள்நாட்டில் வழக்கு விசாரணை முடிந்துவிட்டதாகவும் ஆனால், வெளிநாடுகளில் நடத்த வேண்டிய விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும் மலேசியத் தொழில் அதிபரின் வலுவான பொருளாதார-அரசியல் செல்வாக்கே இந்த தாமதத்திற்கு காரணம் என்றும் சிபிஐ தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளன.

‘நமது அரசாங்கத்திடமிருந்து எதிர்வினை இல்லை’

“நம் நாடு பற்றி இப்படிச் செய்திகள் வந்துகொண்டிருக்கும்போது அரசாங்கத்திடமிருந்து எதிர்வினை எதுவும் வரவில்லை.

“நஸ்ரி இதற்கு வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என்று கோபிந்த் கூறினார்.

இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்துக்கு கைபேசி சேவை வழங்க உரிமம் வழங்கப்பட்டதில் அதிகார அத்துமீறல்கள் நடந்திருப்பதாக முன்னாள் இந்திய தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீதும் மெக்சிஸ், ஏர்செல் நிறுவனங்கள் மீதும் இன்னும் பலர்மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏர்செல்லின் முன்னாள் உரிமையாளர் சி.சிவசங்கரன்,  ஏர்செல்லுக்கு உரிமம் கிடைப்பதை மாறன் “வேண்டுமென்றே” தாமதப்படுத்தினார் என்றும் அதன் காரணமாக தாம் ஏர்செல்லை மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனிடம் விற்க நேர்ந்தது என்றும் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.