வெளிக்குத்தகைக்கு விடுவதால், மலேசிய விமான நிறுவனத்தின் (எம்ஏஎஸ்) “பணமெல்லாம் பறிபோவதாக” ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் கூறுகிறார்.
“மாஸ் ஊழியர்கள், அவர்கள் செய்த பணிகள் எல்லாம் இப்போது வெளியாருக்குக் குத்தகைக்கு விடப்படுவதாக என்னிடம் புகார் செய்துள்ளனர்.
“பயணப் பெட்டிகளையும் சரக்குகளையும் ஏற்றி இறக்க வங்காள தேசிகளையும் நேப்பாளிகளையும் அவர்கள் (எம்ஏஎஸ்) பயன்படுத்துகிறார்கள். நம் மக்கள் வேலையிலிருந்து சுயவிருப்பத்துடன் விலகிக்கொள்ளும் திட்டம் (விஎஸ்எஸ்) கொண்டுவரப்பட்டுள்ளது.
“புதிய சிஇஓ(தலைமை செயல் அதிகாரி அஹ்மட் ஜவுஹாரி யாக்யா) என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். எம்ஏஎஸ்-ஸை வங்காள தேசம், நேப்பாளம் போன்ற நாடுகளின் குத்தகை ஊழியர்களைக் கொண்டு நிரப்புவதுதான் அவரது திட்டமா? இப்படித்தான் எம்ஏஎஸ்-ஸை நிமிர்த்தி வைக்கப் பார்க்கிறாரா. அல்லது வேறெந்த திட்டத்தையும் வைத்திருக்கிறாரா?”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
எம்ஏஎஸ்-ஸுக்கு விமானத்துக்கான எரிபொருள் வழங்கும் குத்தகை தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசுக்குக் கொடுக்கப்படாமல் பெட்ரோனுக்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்றும் அவர் வினவினார். எம்ஏஎஸ் உணவு தயாரித்துப் பரிமாறும் வேலையைச் சரியாகத்தான் செய்து வந்தது. ஆனால், அதுவும்கூட இப்போது வெளி நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
“தேசிய விமான நிறுவனம், நம் நாட்டைச் சேராத ஒரு நிறுவனத்திடம் எண்ணெய் வாங்குவதன் நோக்கம் என்ன? பெட்ரோனாசும் எம்ஏஎஸ்-ஸும் விளக்கம் தர வேண்டும்”.
உணவு தயாரித்துப் பரிமாறும் சேவைக்கான குத்தகையின் பெறுமதி ரிம2 பில்லியன் ரிங்கிட்.
இப்படி எம்ஏஎஸ்-ஸின் பணமெல்லாம் கரைந்துபோய் அந்நிறுவனத்தை ஏர் ஏசியா எடுத்துக்கொள்ளும் சூழல் உருவாகலாம் என்று குறிப்பிட்ட காலிட், தேசிய விமான நிறுவனத்தின் இழப்புகளைத் தடுத்து நிறுத்தும் திட்டம்தான் என்னவென்பதை எம்ஏஎஸ் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.