நடப்பு நிர்வாகம் மலேசியாவை மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு மாற்றியுள்ளது. அதனால் அரசாங்க மாற்றம் தேவை இல்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
அரபு எழுச்சி பற்றிக் குறிப்பிட்ட அவர், அத்தகைய எழுச்சியை மலேசியர்கள் இங்கு நிகழ அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
“அரசாங்கம் சீராக இருக்கும் போது அதனை ஏன் பழுது பார்க்க வேண்டும். அதில் பழுது ஏதும் இல்லை. அதை விட மிக நன்றாக உள்ளது. மற்ற நாடுகள் நமது நாட்டைக் கண்டு பொறாமைப்படுகின்றன,” என்றார் நஜிப்.
“நாம் தோல்வி கண்ட நாடாக இருந்தால் தென் பிலிப்பீன்ஸில் உள்ள மோரோ இன மக்கள் 40 ஆண்டு கால ரத்தக்களறிக்குப் பின்னர் அமைதிக்கு நம்மை நாடுவார்களா ?”
பிரதமர் இன்று புத்ரா உலக வாணிக வளாகத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமான ‘Himpunan Barisan 1Malaysia’ வில் கலந்து கொண்டுள்ள 2,000 மக்களிடம் பேசினார்.
அரபு எழுச்சியின் போது ஆட்சி மாற்றம் கண்ட நாடுகளின் நிலைமை மலேசியாவிலிருந்து வெகு தொலைவு மாறுபட்டவை என்றும் இங்கு இளைஞர்கள் முழு நம்பிக்கையுடன் எதிர்காலத்தை பார்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கம் மக்களுக்கு பல வகையான சலுகைகளை வழங்கியுள்ளது, நாடு நன்றாக ஆட்சி புரியப்படும் போது இன்னும் நிறையக் கொடுக்க முடியும் என்றார் நஜிப்.
“அண்மையில் நாங்கள் சம்பளங்களையும் அலவன்ஸ்களையும் ஒய்வூதியங்களையும் நாங்கள் உயர்த்தியுள்ளோம். Bantuan Rakyat 1Malaysia (BR1M) 1, BR1M 2 என்ற உதவித் தொகைகளையும் வழங்கியுள்ளோம்.
திருமணமாகாதவர்களுக்கும் அது கிடைக்கிறது. நாங்கள் இலவசமாக கார் டயர்களைக் கூட கொடுத்துள்ளோம்.”
‘உங்களுக்கு வேறு என்ன வேண்டும் ? எதிர்காலத்தில் நாடு நன்றாக ஆட்சி புரியப்படும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் இன்னும் அதிகமாகக் கொடுப்போம், அதிகமாகக் கொடுக்க முடியும்.”
எதிர்க்கட்சிகளுடைய கொள்கை அறிக்கையான புக்கு ஜிங்காவில்- அல்லது மற்றவர்கள் சொல்லும் புக்கு ஜிங் -கே -யில் கூறப்பட்டுள்ள ‘வெற்று வாக்குறுதிகளை’ போன்றவற்றின் வழி அதனைச் செய்ய முடியாது என நஜிப் புன்னகையுடன் கூறினார்.
மேலோட்டமான அரசியல் பேரணி
ஒர் அரசியல் பேரணிக்கான உரையைப் போன்று நஜிப் உரை தோன்றியது. தேர்தலில் குளறுபடிகள் நடப்பதாகஎதிர்க்கட்சிகள் கூறிக் கொள்கின்றன ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட பிரச்னைகள் எழுந்துள்ளன என அவர் சொன்னார்.
“ஆனால் அவர்கள் மோசடி நிகழ்ந்துள்ளதாகக் கூச்சல் போட்டார்களா அல்லது ஒபாமா வெற்றியை நிராகரித்தார்களா ? பக்காத்தான் ஐந்து மாநிலங்களில் வெற்றி கண்ட போது அவர்கள் மௌனமாக இருந்தனர். ஆனால் 12 வயதினர் கூட வாக்காளர் பட்டியலில் இருப்பதாக அவர்கள் மீண்டும் கூறத் தொடங்கியுள்ளனர்.”
“ஆதாரத்தைக் காட்டுங்கள். நாங்கள் அதனைச் சரி செய்கிறோம். மற்ற நாடுகளிடம் அழுக வேண்டாம். ஆஸ்திரேலியாவிடம் உதவியைக் கோரி நமது நாட்டை அவமானப்படுத்த வேண்டாம். ஆனால் ஆஸ்திரேலியர்கள் கெட்டிக்காரர்கள். ‘அதற்கு வழியில்லை’ எனச் சொல்லி விட்டனர்.”
எதிர்வரும் தேர்தலில் மோசடி நிகழக் கூடும் எனக் கூறிக் கொண்டு அதில் ஆஸ்திரேலியா தலையிட வேண்டும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் விண்ணப்பத்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அன்வாரை பெயர் குறிப்பிடாமல் அவர் பிஎன் தலைவருமான நஜிப் நகைச்சுவை ஒன்றையும் கூறினார்.
“அவர் அங்கும் இங்கும் செல்கிறார். மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டுகிறார்.’
“அவர் தலையிடுவது இன்னும் முடியவில்லை. அதனால் தான் என்னவோ என்னைப் பாதுகாப்பதற்காக கூண்டை போன்ற ஒரு மேடையை அமைத்துள்ளனர்,” என அவர் சொன்ன போது கூட்டத்தினர் சிரித்தனர்.
அந்த நிகழ்வுக்கு 500,000 ரிங்கிட் செலவானது என்றும் அரசாங்கமும் மற்ற அமைப்புக்களும் அதற்கு ஆதரவு அளித்தன என்றும் ஏற்பாட்டுச் செயலகத் தலைவர் அகமட் மஸ்லான் சொன்னார்.
அந்தக் கூட்டம் நாட்டு நிர்மாணிப்புக்கான கட்சிச் சார்பற்ற நிகழ்வு என்றும் பிஎன் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை என இதற்கு முன்னர் வலியுறுத்திய அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அகமட் இன்று தமது உரையில் அந்த நிகழ்வை “தகவல் செயலகமும் வெளிநாட்டு அம்னோ மன்ற முன்னாள் உறுப்பினர்களும்” ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் பங்கு கொண்ட 1,500க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு அன்பளிப்புக்களும் விநியோகம் செய்யப்பட்டன. அத்துடன் ஒரே மலேசியா கோட்பாடு மீதான பிரசுரங்களும் கொடுக்கப்பட்டன.
மேடையில் காணப்பட்ட தனிநபர்களில் (கௌரவ விருந்தினர்கள் எனக் கருதப்படுகின்றது) பக்காத்தான் ராக்யாட் எதிர்ப்பு பேச்சாளர்களான உமி ஹபில்டா அலி, முன்னாள் பிகேஆர் உறுப்பினர் எஸ் நல்லகருப்பன், இவ்வாண்டு தொடக்கத்தில் பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் குதத்தை ஆட்டும் பயிற்சியில் ஈடுபட்ட குழுவுக்குத் தலைமை தாங்கிய முகமட் அலி பாஹ்ரோம் ஆகியோரும் இருந்தனர்.
நல்லகருப்பன், உமி ஆகியோர் முதல் வரிசையில் பிரதமருடைய துணைவியார் ரோஸ்மா மான்சோருடன் அமர்ந்திருந்தார்கள்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியும் காணப்பட்டார். அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில், பிபிபி தலைவர் எம் கேவியஸ் ஆகியோர் மேடையில் இருந்த பிஎன் தலைவர்களில் அடங்குவர்.
இதனிடையே காசா மனித நேய நடவடிக்கைகளுக்காக கூட்டத்தினரிடமிருந்து 10,000 ரிங்கிட்டைத் தான் திரட்டியுள்ளதாக வெளிநாட்டு அம்னோ மன்ற அமைப்பு அறிவித்தது.