லைனாஸ்-எதிர்ப்பு நடைப்பயணத்தில் 20,000 பேர் சேர்ந்தனர்

பகாங், கெபெங்கில் லைனாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க  குவாந்தானிலிருந்து கோலாலலும்பூருக்கு மேற்கொண்ட 300கிமீ ஹிம்புனான் ஹிஜாவ் நடைப்பயணம் டாட்டாரான் மெர்டேகாவைச் சென்றடைந்துள்ளது.

70 பேருடன்தான் நடைப்பயணம் தொடங்கியது. ஆனால், படிப்படியாக அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. டாட்டாரான் மெர்டேகாவை அடைந்தபோது அந்த எண்ணிக்கை இருபதாயிரமாக பல்கிப் பெருகியது.

மாலை 5.20 வாக்கில் டாட்டாரானை அடைந்த அவர்களிடம் பேசிய ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத் தலைவர் வொங் தெக் எல்லாத் தரப்பு மலேசியர்களும் கலந்துகொண்ட அந்த நடைப்பயணம் ஒரு மாபெரும் வெற்றி என அறிவித்தார்.

300கிமீ நடைப்பயணம் நெடுகிலும் எல்லாக் கதவுகளும் தங்களுக்குத் திறந்திருந்தன என்றும் ஆனால், டாட்டாரான் மெர்டேகா மட்டும் உள்ளே செல்ல முடியாமல் மூடப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

வொங், தாமும் இன்னும் சிலரும் போலீஸ் தடுப்புகளுக்கு அருகிலேயே நாளைக் காலை 9மணிவரை குந்தியிருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

“இந்நடைப்பயணம் எந்த ஓர் அமைப்பாலும் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனாகத்தான் நான் இதில் கலந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோருமே அப்படித்தான் கலந்துகொண்டிருக்கிறீர்கள்.

“என் செயல்களுக்கு நானே பொறுப்பு. நான் இங்கு அமர்ந்திருக்கப் போகிறேன். நீங்களும் அமரலாம், அல்லது போகலாம். அது, உங்கள் விருப்பம்”, என்றவர் உரைத்தார்.

இதனிடையே, அங்கிருந்த டாங் வாங்கி  மாவட்ட போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட், கூட்டத்தாரை எச்சரித்தார். அனுமதி பெறாமல் கூட்டம் கூடியிருப்பதற்காகக் கூட்டத்தார்மீது அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர்.