5வது டோங் ஜோங் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பு

தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிராக சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் இன்று ஏற்பாடு செய்த பேரணியில் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அந்தப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்விக்கு பாதகமாக உள்ளது எனக் கூறிக் கொண்டு அதற்கு எதிராக 700க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்களின் ஆதரவுடன் டோங் ஜோங் அந்த ஆர்ப்பட்டத்தை நடத்தியது.

ஏற்கனவே டோங் ஜோங் ஏற்பாடு செய்த நான்கு பேரணிகளைப் போன்று பெரும்பாலும் நடுத்தர வயதுடைய மக்களே இன்றைய நிகழ்விலும் கலந்து கொண்டனர். இளைஞர்களும் அங்கு காணப்பட்டனர்.

பெரும்பாலான இளைய பங்கேற்பாளர்கள் பச்சை, மஞ்சள் நிற டி சட்டைகளை அணிந்திருந்தனர். தாங்கள் பின்னர் ஹிம்புனான் ஹிஜாவ் ஊர்வலத்திலும் பங்கு கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

அந்தப் பேரணி நிகழ்ந்த டாத்தாரான் பிஜே-யைச் சுற்றிலும் பல பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

அவற்றில் மசீச-வையும் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங்-கையும் இலக்காகக் கொண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவர்கள் சமூகத்தின் தேவைகளைப் புறக்கணித்து விட்டதாக அவை குற்றம் சாட்டின.

அந்த இரண்டு மணி நேரப் பேரணியின் போது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. ஒரே போதானா முறையைக்கொண்ட கல்வி முறையைத் தோற்றுவிப்பதும் தாய்மொழிக் கல்வியை கை விடுவதும் தேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் இறுதி நோக்கம் என்பதால் அந்தத் திட்டத்தை எதிர்ப்பது.

2. தேசிய மொழிக்கு மதிப்பளித்து, சிறுபான்மை இனங்களுடைய பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளித்து உலக கல்வி மேம்பாடுகளுக்கு ஏற்ப தேசியக் கல்விப் பெருந்திட்டத்தை திருத்துமாறு கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வது

‘சீனப் பள்ளிகளும் பங்காற்றியுள்ளன’

அந்தப் பேரணி அரசாங்க எதிர்ப்புப் பேரணியாகக் கருதப்படக் கூடாது என டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியான் தமது உரையில் வலியுறுத்தினார். ஏனெனில் அரசாங்கத்தின் ஒரு மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கு தனக்குள்ள உரிமையைப் பயன்படுத்துகின்றது என்றார் அவர்.

கூட்டரசு அரசமைப்புக்கு இணங்க ஒவ்வொரு இன வம்சாவளிக்கும் தனது தாய்மொழியைக் கற்கவும்  பயன்படுத்தவும் உரிமை உண்டு என அவர் சொன்னார். ஆனால் அரசாங்கம் தாய்மொழியைப் பள்ளிகளை மூடுவதற்கு எண்ணுகிறது என்றார் அவர்.

தேசியக் கல்விப் பெருந்திட்டம் சுயேச்சை சீனப் பள்ளிகளை ஒரங்கட்டியுள்ள வேளையில் தாய்மொழிப் பள்ளிகளில் வாரம் ஒன்றுக்கு பாஹாசா மலேசியா போதனையை 390 நிமிடங்களாக உயர்த்துகிறது எனக் குறிப்பிட்ட அவர், அதனால் அந்தப் பள்ளிகளுடைய அடையாளம் காணாமல் போய் விடும் என்றார்.

“தேசியக் கல்விப் பெருந்திட்டம் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டுள்ள போதிலும் தாய்மொழிக் கல்விக்கான உரிமைகளை அது மீறுகிறது.”

“அத்துடன் தேசியக் கல்விப் பெருந்திட்டம் கல்வி வளங்களை நியாயமாக விநியோகம் செய்யவில்லை.

தாய்மொழிக் கல்வி நாட்டு நிர்மாணிப்புக்கு ஆற்றியுள்ள பங்கை அது புறக்கணிக்கின்றது,” என்றும் யாப் சொன்னார்.

தாம் வெட்கப்படுவதாக மசீச உறுப்பினர் ஒருவர் சொன்னார்

அந்தப் பேரணியில் பேசிய 20 பேரில் கோத்தா கெச்சில் மசீச கிளைத் தலைவர் தாய் பூ ஹின்-னும் ஒருவர்.அவர் டோங் ஜோங் பேரணியில் கலந்து கொண்டு பேசியது பலருக்கு வியப்பை அளித்தது.

“நான் கோத்தா கெச்சில் மசீச கிளையச் சார்ந்தவன். தயவு (எங்கள்) மீது முட்டைகளை எறியாதீர்கள்.. மசீச எதிர்ப்புப் பதாதைகளைப் பார்த்த போது நான் தலை குனிந்தேன்,” என அவர் சொன்ன போது கூட்டத்தினர் சிரித்தனர்.

தேசியப் பெருங்கல்வித் திட்டத்துக்கு எதிராகப் போராடுமாறு தாய்மொழிக் கல்விக்கு சம உரிமை கோருமாறும் ஜோகூரைச் சார்ந்தவரான தாய் சீன சமூகத்தைக் கேட்டுக் கொண்டார்.

மசீச தலைமைத்துவம் மாற்றுவதற்கு மறுத்தால் மக்கள் மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

அந்தப் பெருந்திட்டத்தை அரசாங்கம் திருத்தாவிட்டால் தாமும் தமது ஆதரவாளர்களும் கட்சியை விட்டு விலகி இன்னொரு கட்சியில் சேர வேண்டியிருக்கும் என தாய் பின்னர் ஊடகங்களிடம் கூறினார்.

தாமும் தமது ஆதரவாளர்களும் மூன்று வாடகை பஸ்களில் வந்ததாகவும் அவர்களில் 80 விழுக்காட்டினர் மசீச உறுப்பினர்கள் என்றும் அவர் கூறிக் கொண்டார்.