வந்திறங்கினால் ஆபத்து; மலேசியப் பயணத்தை ரத்து செய்த ராஜபக்சே!

மலேசியாவில் தமக்கு பெரும் அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்த இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே மலேசியாவிற்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறியமுடிகிறது.

தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மலேசிவிற்கான பயணத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இரத்துசெய்துள்ளதாக மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தின் ஊடகப் பிரிவு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளது. எனினும் இத்தகவலை செம்பருத்தியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

எதிர்வரும் 4-ஆம் தேதி தொடக்கம் 6-ஆம் தேதி வரை ஜொகூரில் நடைபெறவுள்ள இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் ராஜபக்சே கலந்துகொள்வதாக இருந்தது. எனினும் அவரது மலேசிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தமிழர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து அவரது பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசு சார அமைப்புகளுடன் இணைந்து அரசியல் வேறுபாடுயின்றி காட்டப்பட்ட இந்த தொடர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆளும்கட்சியில் முக்கிய அங்கம் வகிக்கும் மஇகா-வும் இணைந்து குரல் கொடுத்தது பாராட்டத்தக்க விடயம். எனினும், ராஜபக்சே எதிர்ப்பு விவகாரத்தில் கோகிலன்பிள்ளையிடம் சென்று மனு கொடுப்பது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயல்பாடுகளை நிறுத்திவிட்டு தமிழர் நலன் சார்ந்த விடயங்களை பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுசென்று பேசவேண்டும் என சிலாங்கூர் நடவடிக்கைக் குழுத் தலைவர் எல். சேகரன் வலியுறுத்தினார்.

மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு எதற்காக மஇகா மனு கொடுக்கிறது? மஇகா-வின் பேச்சை மத்திய அரசாங்கம் மதித்து கேட்கவில்லை என்றால் மஇகாவிற்கு அங்கு என்ன வேலை என சேகரன் வினவினார்.

தேர்தலுக்கான காரணியாக ராஜபக்சே வருகை இன்று ரத்தாகியிருக்கலாம். எனினும் தேர்தலுக்குப் பின்னர் இந்நாட்டில் அம்னோவின் ஆட்சி தொடருமேயானால் ராஜபக்சேவுக்கு, நமது பிரதமர் நஜிப் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்? மேலும் ராஜபக்சே வருகை உண்மையில் ரத்தாகியிருந்தால் அது மலேசிய தமிழர்களின் பேராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இருக்கும் என சேகரன் கூறினார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்றும் வர அனுமதிக்கப்பட்டால், வருகின்ற 4-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை எதிர்த்து பெரும் அளவிலான முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் எச்சரித்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: