ஹிம்புனான் ஹிஜாவ் நடைப்பயணத்தில் பங்கேற்றோர், டாட்டாரான் மெர்டேகாவுக்குப் பக்கத்திலேயே ‘மக்கள் கூட்டமொன்றை’ நடத்தி, பகாங், கெபெங்கில் லைனாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் மூன்று தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்.
குவாந்தானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 300கிமீ நெடும்பயணத்தில் கலந்துகொண்டவர்களில் 200 பேர், நேற்றிரவை டாட்டாரானுக்கு அருகிலேயே கழித்தனர். டாட்டாரானுக்குள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால் தடுப்புகளுக்கு முன்புறமுள்ள சாலையில் அவர்கள் படுத்துறங்கினர்.
இன்று காலை மேலும் 150 பேர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
அளவலாவல், பசியாறுதல் ஆகியவற்றுடன் அவர்களின் இன்றைய காலைப் பொழுது தொடங்கிற்று.
ஹிம்புனான் ஹிஜாவ் விளம்பரப் பிரிவுத் தலைவர் லீ சியான் சங், காலையில் கூடிய ‘மக்கள் கூட்டம்’ இவ்வாண்டு பிப்ரவரி 26-இல் குவாந்தான் ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 பேரணியில் பரிந்துரைக்கப்பட்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்றுவது பற்றி விவாதித்ததாகக் கூறினார்.
“எம்பிகள் வந்து எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்”, என்றாரவர். காலையில் சில எம்பிகள்.அவர்களில் டிஏபி தலைவர் லிம் கியாட் சியாங்கும் இருந்தார்.
காலை மணி 9.15க்கு குவாந்தானிலிருந்து நெடும்பயணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான ஜம்ரி ஜைனல், மூன்று தீர்மானங்களையும் வாசித்தார்.
லைனாஸ் ஆலையை நிறுத்த வேண்டும் என்பதுடன் பகாங், புக்கிட் கோமான் தங்கச் சுரங்கம், சிலாங்கூர் ராவாங்கில் மிகுந்த சக்திகொண்ட மின் கோபுரம், ஜோகூர், பெங்கேராங் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிகல் ஆலை போன்ற அபாயமிக்க திட்டங்களையும் நிறுத்த வேண்டும் அல்லது மறு ஆய்வு செய்ய வேண்டும் என அத்தீர்மானங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றன.
ஓராங் அஸ்லிகளின் நிலங்களை அபகரிப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவை கோரிக்கை விடுத்தன.
ஒரு டஜனுக்கு மேற்பட்ட எம்பிகளும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும்-எல்லாருமே மாற்றரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்- சாலையில் ஹிம்புனான் ஹிஜாவ் ஆதரவாளர்களுடன் அமர்ந்து அத்தீர்மானங்களுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்கள்.
இரவில் ஏற்பட்ட பதற்றம்
அந்நெடும்பயணத்தில் கலந்துகொண்டவர்கள் களைத்துப் போயிருந்தாலும் ஊக்கத்துடன் இருப்பதாக லீ கூறினார்.
“இரவு இரண்டு மணிவரை கித்தார் இசை இசைத்து பொழுது போக்கினோம். (பசுமைப் பயணத்தின் வெற்றியை) மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
ஆனால், பின்னிரவு ஒரு மணி வாக்கில், இசைநிகழ்ச்சியில் மகிழ்ந்திருந்தபோது திடீரென்று சுமார் 70 போலீசார் மூன்று பேருந்துகளில் வந்திறங்கியதும் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
“போலீஸ் எங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்றெண்ணிக் கலங்கினோம்”
ஆனால், போலீசார் அப்படி எதுவும் செய்யவில்லை. அவர்கள் அந்த டாட்டாரான் மெர்டேகாவுக்குள் யாரும் செல்லாதபடி பாதுகாக்க வந்தவர்கள். கூட்டத்தின்மீது ஒரு கண் வைத்திருந்தார்களே தவிர அதைக் கலைக்க முற்படவில்லை.