அப்துல் கபுர் சாலே (பிஎன்- கலாபாகான்), உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு அரசு உதவித் தொகை பெற்ற பொருள்களைச் சரியானபடி கண்காணிப்பதில்லை என்று சாடியுள்ளார். உதவித்தொகை பெறும் பொருள்கள் பெருமளவில் அண்டை நாடான இந்தோனேசியாவுக்குள் கடத்தப்படுவதாக அவர் கூறினார்.
“மில்லியன் கணக்கில் உதவித்தொகை பெறும் பொருள்கள் எல்லை தாண்டிக் கொண்டுசெல்லப்படுகின்றன. கண்காணிப்பு அறவே இல்லை போலத் தெரிகிறது….எங்கள் ஆதரவாளர்கள் எங்களிடம் இதைத் தெரிவித்தனர். இந்தோனேசிய பக்கம் சென்றும் அவர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள்”, என்று அந்த எம்பி இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.
“ஒன்றிரண்டு எரிவாயு கலன்கள் (கடத்திச் செல்லப்படுகிறது) என்றால் கவலைப்பட தேவையில்லை. ஆனால், மில்லியன் கணக்கில் கடத்தப்படுகின்றன”.
அப்துல் கபுர், தம் துணைக் கேள்வியில், இவ்விவகாரத்தை முழுமையாக சமாளிக்க அரச மலேசிய சுங்கத் துறை, மலேசிய கடலோர அமலாக்க அமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து பணிக்குழு அமைக்கும் திட்டம் எதுவும் அமைச்சரிடம் உண்டா என்று வினவினார்.