மகாதிர்: பொதுத் தேர்தலில் நஜிப் மட்டுமே மும்முரமாக இருக்கிறார்

அடுத்த ஆறு மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றாலும் அம்னோ தொகுதிகள் களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக செயல்படக் காணோம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். வேட்பாளர்களைத் தெரிந்துகொள்ள அவை காத்திருப்பதுபோல் தெரிகிறது என்றாரவர்.

“நான் (அம்னோ தலைவர்) நஜிப் (அப்துல் ரசாக்) மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுவதைப் பார்க்கிறேன். தொகுதி நிலையில் வேட்பாளர்கள் யார் என்பதை அறிந்துகொண்டு செயல்படக் காத்திருக்கிறார்கள்.

“இப்படிப்பட்ட போக்கு பரவலாக நிலவினால் அது நமக்குத் தோல்வியைக் கொண்டுவரலாம். இதற்குள் அவர்கள் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி இருக்க வேண்டும்.

“வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. நாம் தேர்தலில் வெல்ல வேண்டும்”. நாளை அம்னோ ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு இன்று, அம்னோவுக்குச் சொந்தமான மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியிடப்பட்டிருந்த ஒரு நேர்காணலில் மகாதிர் இவ்வாறு கூறியிருந்தார்.

ஆளும் கூட்டணியின் மிகப் பெரிய கட்சி பொதுத் தேர்தலுக்குத் தயாராக உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அம்னோவின் பிரச்னை என்னவென்றால், அதன் உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் இல்லையேல் ஆதரிக்க மாட்டார்கள் என்றவர் சொன்னார்.

அம்னோவின் மற்ற பகுதிகளின் செயல்பாடு பற்றியும் அவரின் கருத்து வினவப்பட்டது. அதற்கு அம்னோவின் அந்த மூத்த தலைவர், இளைஞர் பகுதியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றார்.

“இளைஞர் பகுதி  சிறப்பாக செயல்படுவதாக தெரியவில்லை. தொகுதிநிலையில் நடைபெறும் கூட்டங்களில் இளைஞர் பகுதி கலந்துகொள்வதைப் பார்க்க முடிவதில்லை. மகளிர் பகுதியும் புத்ரி பிரிவும் துடிப்புடன் செயல்படுகின்றன”.

பொதுத் தேர்தலில் நஜிப்புக்கே தம் ஆதரவு என்றவர் பிரகடனம் செய்தார். நஜிப் அனுமதித்தால் கட்சிக்காக பரப்புரை செய்யவும் தயார் என்றாரவர். 

பிஎன், கெடாவையும் சிலாங்கூரையும் திரும்பக் கைப்பற்றலாம். ஏன், பினாங்கையும் கிளந்தானையும்கூட வெல்லலாம்.

“எல்லாம் அம்னோவைப் பொறுத்துள்ளது”, என்றுரைத்த அவர்.  அம்னோ தோல்வியுறுமானால் கட்சிக்குள் கீழறுப்பு வேலைகளே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்றார். .