பிஎன் உறுப்புக் கட்சிகள் சிலாங்கூரில் நடத்தியுள்ளதாகக் கூறப்படும் நில அபகரிப்பு குறித்து பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் மௌனமாக இருப்பது அந்தக் கூட்டணி மாற்றத்தை செய்வதற்கு அருகதை இல்லாதது என்பதற்கு இன்னொரு எடுத்துக் காட்டு என டிஏபி கூறிக் கொள்கின்றது.
“பிஎன் மாறுவதற்குத் தயாராக இருப்பதாக நஜிப் கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் அரசாங்க நிலம் மிகவும் மலிவான விலையில் பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கு விற்கப்பட்ட கடந்த கால ஊழல் நடவடிக்கைகளுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளிக்கும் போது மாற்றம் எங்கே நிகழ்கின்றது ?” என டிஏபி பிரச்சாரப் பிரிவுச் செயலாளருமான டோனி புவா ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
டிஏபி-யின் செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் அந்த நில அபகரிப்பை அம்பலப்படுத்திய பின்னர் “தெளிவாக ஊழல், அதிகார அத்துமீறல், சுய நலன்” சம்பந்தப்பட்டுள்ள போதிலும் சிலாங்கூர் மாநில பிஎன் உறுப்புக் கட்சிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு வெகு விரைவாக அறிக்கை விடுத்ததை புவா சுட்டிக் காட்டினார்.
ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலையில் 24 துண்டு நிலங்கள் விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த நிலங்களின் மொத்த மதிப்பு 20 மில்லியன் ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிஎன் கட்சிகளுக்கு நிலம் வழங்கப்பட்டதைத் தற்காத்த சிலாங்கூர் அம்னோ தலைவர் அப்துல் சுக்கோர் இட்ருஸை சிலாங்கூர் மாநில மசீச செயலாளரும் கோலா குபு பாரு சட்ட மன்ற உறுப்பினருமான வோங் கூன் முன் -னும் ஆதரித்துள்ளனர்.
“மசீச-வுக்கு நிலம் வழங்கப்பட்டதில் தவறு ஏதுமில்லை எனக் கூறிக் கொண்ட வோங், அரசியல் கட்சிக்கு நிலம் கொடுக்கப்படுவதை கோவில்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் மலிவாக நிலம் வழங்கப்படுவதை வோங் ஒப்பிட்டுப் பேசினார்,” என புவா குறிப்பிட்டார்.
“மலேசியச் சீனர்கள் குடியுரிமை பெறவும் அவர்களுடைய உரிமைகளுக்குப் போராடவும் மசீச மேற்கொள்ளும் முயற்சிகளினால் அந்த ‘நில அபகரிப்பு’ நியாயமானது என்றும் வோங் குறிப்பிட்டுள்ளார்.”
அவர்களுடைய பதில்கள் பிஎன் “ஊழல், அதிகார அத்துமீறல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாததோடு” அதிகாரிகள் “கையும் களவுமாக பிடித்த பின்னரும் கூட வெட்கமில்லாமல் அந்தக் கட்சிகள் நடந்து கொள்கின்றன” என்றார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா.
“தாங்கள் அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் செலவில் பயனடையும் உரிமை அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. இல்லை என்றால் அது தெளிவான நம்பிக்கை மோசடியாகும்.’
பிஎன் ‘நீக்குப் போக்குடையது’, மாற்றம் காணத் தயாராக இருக்கிறது என்று கூறிக் கொண்டு அடுத்த பொதுத்தேர்தலில் பிஎன் -னுக்கு வாய்ப்புக் கொடுக்குமாறு நஜிப் மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார் என புவா குறிப்பிட்டார்.
பிஎன் தலைவர்கள் தங்களது கடந்த கால ஊழல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்காத்துப் பேசுவது, பிஎன் ‘பழுதாகி விட்டது’ என்பதை மட்டுமின்றி ‘மாற்றம்’ காண முடியாதது என்பதையும் மெய்பித்துள்ளதாக அவர் சொன்னார்.
“அந்த ஊழல் நடைமுறை குறித்து பிரதமர் கருத்துரைக்க மறுத்துள்ளதோடு சிலாங்கூர் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுடைய நேர்மையற்ற அந்த நடவடிக்கையைக் கண்டிக்கத் தவறியுள்ளதும் மிகவும் மோசமானதாகும்.”
“எனவே நஜிப் ஆரூடம் கூறியுள்ளது போல மாநில அரசாங்கமாக பிஎன் தேர்வு செய்யப்பட்டால் அவரது தலைமைத்துவத்தின் கீழ் அம்னோ, மசீச, மஇகா, கெரக்கான் ஆகியவை மாநில அரசாங்கச் சொத்துக்களை தொடர்ந்து சூறையாடும். கொள்ளையிடும்.” “நமது நாட்டில் மாற்றம் நிகழ முடியும். நாங்கள் அதனை மெய்பித்துள்ளோம். ஒரே அரசாங்கத்தைக் கொண்டு நாங்கள் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்,” என நஜிப் கடந்த சனிக்கிழமை பாரிசான் சத்து மலேசியா கூட்டத்தில் பிரகடனம் செய்தார்.
அரசாங்கம் சீராக இயங்குவதால் அதனை பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் அப்போது கூறினார்.