பத்து காவான் பிஎன் ஒருங்கிணைப்பாளர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்க்கப்பட்டது

பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியின் உதவியாளர்களான எம் சத்தீஸ், என் அமால் தாஸ் ஆகிய இருவருக்கும் எதிராக பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) ஒருங்கிணைப்பாளர் ஏ மோகன் சமர்பித்திருந்த அவதூறு வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ளது.

பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜிவி வர்க்கீஸ் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காண மோகன், சத்தீஸ், அமால் தாஸ் ஆகியோர் ஒப்புக் கொண்ட பின்னர் அந்தத் தீர்வைப் பதிவு செய்தார்.

அந்தத் தீர்வின் படி, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி  தாமான் சுப்ரீமில் உள்ள ராமசாமியின் சேவை மய்யத்தில்  நிகழ்ந்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் மோகன் மீது அவதூறான அறிக்கைகளை விடுத்ததை பிரதிவாதிகளான சத்தீஸும் அமால் தாஸும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

என்றாலும் தங்களுக்கு தீய நோக்கம் ஏதுமில்லை எனக் கூறிக் கொண்ட அவர்கள் இருவரும் அந்த அறிக்கைகள் மோகனுடைய உணர்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக எந்த நிபந்தனையும் இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

மோகன் சார்பில் வழக்குரைஞர்களான பால்ஜித் சிங்-கும் வி அமரேசனும் ஆஜரானார்கள். சத்தீஸ், அமால் தாஸ் ஆகியோருக்காக வழக்குரைஞர் எஸ் முரளி வாதாடினார்.

பெர்னாமா