அன்வாரின் ‘செராமா’ வுக்குச் சென்ற ஆசிரியை வேலைநீக்கம்

பகுதி-நேர சமய ஆசிரியை ஒருவர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் செராமாவுக்குச் சென்றதற்காக தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

லாபுவானில், ஆசிரியையாக பணிபுரியும் குவாட்ருன் நாடா முகம்மட் லட்பி, உள்ளூர் அம்னோ தலைவர் ஒருவரின் பேச்சைக் கேட்டுக் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை (ஜாவி) தமக்குப் பதவிநீக்கக் கடிதம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

“செப்டம்பர் 15-இல், அன்வாரின் அரசியல் உரையைக் கேட்பதற்காகச் சென்றேன். அதைத் தொடர்ந்து உள்ளூர் அம்னோ தலைவர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். அரசு ஊழியரான நான் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றார்”.

அம்னோ தலைவருடன் நடந்த அந்த உரையாடலுக்குப்பின் லாபுவான் ஜாவி உதவி தலைமை இயக்குனரையும் தம் பள்ளி முதல்வரையும் சந்திக்குமாறு உத்தரவு வந்தததாக குவாட்ருன் கூறினார்.

“அவர்கள் என் நடவடிக்கைகள் பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ள விரும்பினர்”.

அந்தச் சந்திப்பின்போது அவர் அன்வாரின் பேச்சைக் கேட்பதற்காக சென்றது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், அவர் பாஸ் தொடர்புடைய ஒரு என்ஜிஓ-வில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டார்.

வேலைநீக்கத்துக்குக் காரணம் கூறப்படவில்லை

அதன்பின், அக்டோபர் 24-இல் ஜாவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், டிசம்பர் முதல் தேதியிலிருந்து அவர் வேலையிலிருந்து நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக அவர் முறையீடு செய்துகொண்டார். வேலையிலிருந்து நிறுத்தப்படுவதற்கான காரணத்தையும் கேட்டிருந்தார்.

அவர் பகுதி-நேர ஒப்பந்த ஊழியர் என்பதால், எந்த நேரத்திலும் அவரை வேலையைவிட்டு நிறுத்தலாம், அதற்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஜாவி அதிகாரி ஒருவர் பதில் அளித்தார்.

குவாட்ருன் வேலைநீக்கம் செய்யப்பட்டதை அரசியல் தொல்லைகளுக்கு ஆளாகும் அரசு ஊழியர்களுக்காக போராடும் என்ஜிஓ-வான Inisiatif Selamatkan Insan Tertindas (இன்சான்) கண்டித்துள்ளது.

அதன் தொடர்பில் ஜாவி தலைமை இயக்குனர் சே மாட் சே அலிக்கு அது ஒரு கண்டனக் கடிதம் அனுப்பும் என அதன் ஒருங்கிணைப்பாளர் முகம்மட் பாரிஸ் அப்துல்லா கூறினார்.