மக்களவையில் எம்பிகள் பாலியல் வசைமொழிகளைப் பயன்படுத்துவதற்கு சிலரது “ “சினமூட்டும் பேச்சுகள்” காரணமாக இருக்கலாம் என்று பிஎன் அரசுஆதரவாளர் மன்ற(பிஎன்பிபிசி)த் துணைத் தலைவர் பங் மொக்தார் ரடின் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
நிலைஆணை 36(4)-ஐ திருத்தம் செய்யும் பரிந்துரைமீதான விவாதத்தில் கலந்துகொண்ட பங் மொக்தார் (பிஎன்- கினாபாத்தாங்கான்) உத்தேச திருத்தத்தில் “சினமூட்டும் பேச்சுகள்” பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“திருத்தம் ‘மரியாதையற்ற மொழி ‘பாலியல் ரீதியான’ சொல் பற்றியெல்லாம் பேசுகிறது. ஆனால், சினமூட்டும் பேச்சுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
“ஒருவேளை சினமூட்டப்படுவது ஆரோக்கியமற்ற பேச்சுகள் வெளிப்பட காரணமாக இருக்கக்கூடும்”, என்றாரவர். பங், அடிக்கடி பெண்களைக் கேலி செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
ஒரு தடவை 2007-இல், போங் போ குவான் (டிஏபி-பத்து காஜா) நாடாளுமன்றத்தில் மழையின்போது ஒழுகுவது பற்றிக் குறைகூறியதற்கு பங் அளித்த மறுமொழி பெரும் கண்டனத்துக்கு இலக்கானது.
“எங்கே ஒழுகிறது? பத்து காஜா எம்பி-க்குக்கூடத்தான் மாதாமாதம் ஒழுகும்”, என்றவர் கிண்டலடித்ததை மகளிர் அமைப்புகள் கடுமையாக கண்டித்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சாலை விபத்துகளுக்குப் பெண் காரோட்டுனர்களே காரணம் என்று கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை உண்டாக்கினார்.