கைரி: இளைஞர்கள் எளிதாக அந்நியச் சக்திகளுக்கு இரையாவதில்லை

இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட அந்நியச் சக்திகளுடைய செல்வாக்கிற்கு எளிதாக இரையாவதில்லை என அம்னோ தலைவர் கைரி ஜமாலுதின் கூறியிருக்கிறார்.

அரசாங்கம் இளைய தலைமுறையினருக்கு அணுக்கமாகச் சென்று அவர்கள் எழுப்பும் பிரச்னைகளையும் அவர்களுடைய பிரச்னைகளையும் செவிமடுப்பதால் பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கத்துக்கு இளைஞர்களுடைய ஆதரவு கூடி வருவதாக அவர் சொன்னார்.

அத்துடன் இந்த நாட்டுப் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளப் போகும் ஒரு தலைமுறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது என கைரி பெர்னாமாவிடம் கூறினார்.

“அரசாங்கங்கள் வீழ்த்தப்பட்ட நாடுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் ஜனநாயக நடைமுறைகள் எவ்வளவோ மேலானவை. “அரசாங்கத்துக்கு எல்லாம் தெரியும்” என்ற கால கட்டத்தையும் நாம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். இளைய தலைமுறையினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றோம். அவர்களுடைய அவாக்களையும் பூர்த்தி செய்கின்றோம்.”

இளைஞர்களுடைய ஆற்றலை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடுகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2013 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருப்பது அரசாங்க முயற்சிகளை காட்டுகின்றது என கைரி குறிப்பிட்டார்.

“பட்டப்படிப்பு மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்குப் பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்தம் வகை செய்துள்ளது. அந்தத் திருத்தம் அமலாக்கப்பட்டால் குழப்பம் ஏற்படும் என சில தரப்புக்கள் அஞ்சின. ஆனால் அது அமலாக்கப்பட்டு ஒராண்டு முடிந்து விட்டது. எந்தக் குழப்பமும் இல்லை,” என ரெம்பாவ் எம்பி-யுமான அவர் தெரிவித்தார்.

“அதற்கு மாறாக இளைஞர்கள் உண்மையில் தேசிய மேம்பாட்டுக்குச் சிறந்த பங்காற்றி வருகின்றனர். என்னை நம்புங்கள் இளைஞர்கள் இந்த நாட்டை உலகில் தலை சிறந்த நாடாக மாற்றுவார்கள்.”

பெர்னாமா