ஸ்கார்ப்பின் விசாரணைக்கு அல்தான்துயா கொலை வழக்கு விசாரணைக் குறிப்புக்கள் அனுப்பப்படுமா ?

ஸ்கார்ப்பின் ஊழலை விசாரிக்கும் பிரஞ்சு நீதிபதிகள் மங்கோலிய பிரஜையான அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு விசாரணையையும் தங்கள் புலனாய்வில் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.

[காணொளி | 4.46 நிமிடம்]

“அது வேறு வழியில் செல்ல முடியும் என நாங்கள் எண்ணவில்லை. நிச்சயம் அவர்கள் அதனைக் கவனிப்பார்கள்,” என Apoline Cagnate என்ற அந்த வழக்குரைஞர் சிங்கப்பூரில் இன்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த போது கூறினார்.

மலேசியா இரண்டு ஸ்கார்ப்பின் ரக நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்ததில் தரகுப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது பிரஞ்சுப் புலனாய்வு கவனம் செலுத்துவதால்- அல்தான்துயா கொலை, புலனாய்வுக்கு அவசியமான அம்சம் இல்லை-என்றாலும் முக்கியமான விஷயங்களில் அதுவும் ஒன்று என Cagnate சொன்னார்.

எனவே அந்தக் கொலை வழக்கு விசாரணைக் குறிப்புக்களை வழங்குமாறு இரண்டு விசாரணை நீதிபதிகளும் கேட்டுக் கொள்வர் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அல்தான்துயா கொலையுண்டது தொடர்பில் இரண்டு பாதுகாப்பு ஊழியர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

TAGS: