அம்னோ பேரவையில் கலந்துகொண்டிருக்கும் சாபா பேராளர்கள் ஊழல் செய்தார் என்ற குறைகூறலுக்கு ஆளாகியிருக்கும் தங்கள் முதலமைச்சருக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாபா அம்னோவுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம40 மில்லியன் “அரசியல் நன்கொடை”பற்றித்தான் எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மூசா அமான் அது பற்றி விளக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
ஊடகச் செய்திகளிலிருந்துதான் அது பற்றித் தெரிந்துகொண்டதாகவும் அப்பெருந் தொகை கட்சியின் கிளைகளுக்கு அல்லது தொகுதிகளுக்குக் கொடுக்கப்பட்டதா என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் சொன்னார்கள்.
கோத்தா மருடு தொகுதி துணைத் தலைவர் பயிண்டின் அலியாஸ் அப்ட் ஹலிம் அடுன் (இடம்), தாம் இன்னும் முதலமைச்சரை ஆதரிப்பதாகக் கூறினார். ஆனால், அப்பணம் பற்றி மூசா தாமே விளக்கமளிக்க வேண்டும் என விரும்புகிறார்.
“ரிம40 மில்லியன் நன்கொடை நன்கொடை பற்றி இதற்குமுன்நான் கேள்விப்பட்டதில்லை. எனவே, அப்பணம் பற்றி சாபா தலைவர்கள் அல்லது கூட்டரசு தலைவர்கள் அடிநிலை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
“குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் சாபா முதலமைச்சர் என்பதால் ரிம40 மில்லியன் பற்றி அவர்தான் விளக்க வேண்டும்”, என என பயிண்டின் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சாபா தெனோம் தொகுதி பேராளர், அந்த “அரசியல் நன்கொடை” சாபாவின் கிராமப்புறங்களில் “பெரிய விவகாரமாக” இல்லை என்றார்.
‘மாற்றரசுக் கட்சிதான் வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறது’
தம் பெயரைத் தெரிவிக்க விரும்பாத அப்பேராளர், முறையான விளக்கம் சொல்லி அவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பது எளிது என்றார்.
“மாற்றரசுக் கட்சிதான் அவ்விவகாரத்தைக் கிளப்பி விட்டது… ஆனால், கம்பங்களில் அது ஒரு பெரிய விவகாரமாகக் கருதப்படவில்லை. பிஎன் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை வர அதற்குத் துல்லியமான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்”, என்றார்.
தெனோம் தொகுதியின் இன்னொரு பேராளரான அரிபின் குலிபோ, மாற்றரசுக் கட்சிதான் அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறத என்றும். சாபாவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் சொன்னார்.
“என்னைப் பொறுத்தவரை தெளிவான விளக்கம் கொடுப்பது நல்லது. நாடாளுமன்றத்தில் அது பற்றி விளக்கப்படவில்லை என்றாலும் அடிநிலை மக்களிடம் விளக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பண விவகாரம் எங்களை குறிப்பாக சாபா மாநிலத் தலைவரை (மூசாவை)ப் பாதிக்காதிருக்க நல்ல விளக்கம் தேவை.
“எனக்குத் தெரிந்தவரை சாபாவில் அது ஒரு பெரிய விவகாரமாகக் கருதப்படவில்லை”, என அரிபின் கூறினார்.
ரிம40 மில்லியனிலிருந்து தெனோம் தொகுதிக்கு ஏதாவது பணம் கொடுக்கப்பட்டது பற்றி அறிவாரா என்று வினவியதற்கு, “எனக்குத் தெரியாது”, என்று அரிபின் கூறினார்.
“பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நிதி பெறும் வழிமுறைதான் தெரியவில்லை.
“ஆனாலும் பேராளர்களாகிய நாங்கள் முதலமைச்சர் மூசாவுக்குப் பக்கபலமாக இருக்கிறோம் ”.
சிபித்தாங் தொகுதி பேராளர் ஒருவர், ஷெம் அலியாஸ் எண்டி பாலோங், முசா மீது கூறப்படும் குற்றச்சாட்டை நம்பவில்லை. அவர் நேர்மையான தலைவர் என்றாரவர்.
“அது சரியல்ல. அவர் நேர்மையானவர். மற்றவர்கள் அவரை அரசியல் விவகாரம் ஆக்கி இருக்கிறார்கள்.
“சாபா பொருளாதாரம் குதிபோட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அவரைக் கவிழ்க்கவும் பெயரைக் கெடுக்கவும் மாற்றரசுக் கட்சி இப்படி ஓரு விவகாரத்தை உருவாக்கியுள்ளதுபோலும்”, என்றார்.
2008-இல்,ஹாங்காங்கில் மலேசிய வணிகர் மைக்கல் சியா (படத்தில் வலம் இருப்பவர்) ரிம40 மில்லியன் மதிப்புள்ள சிங்கப்பூர் நாணயத்துடன் கோலாலும்பூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.
சியா, மூசாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அப்பணம் பற்றி பல வதந்திகள் உலவின.
அது நடந்து நான்காண்டுகளுக்குப் பிறகு, சியா குற்றம் எதுவும் செய்யவில்லை என சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அறிவித்திருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் நாடாளுமன்றக்த்தில் தெரிவித்தார்.
ஆனால், பிகேஆருக்கு நம்பிக்கை வரவில்லை. அதன் அதிகாரிகள் அப்பண விவகாரத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஹாங்காங்கின் சுயேச்சை ஊழல் எதிர்ப்பு ஆணையத்தைக்
கேட்டுக்கொள்ளப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.