பிஎன் -னின் ஊழல் ஆட்சியே மலாய்க்காரர்களை அவர்களது சொந்த மண்ணில் அகதிகளாக்கி விடும், மலாய் அதிகாரத்தை இழப்பதால் அல்ல என பிகேஆர் கூறுகிறது.
“மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்தால் அவர்கள் ஏன் ஒதுக்கப்பட வேண்டும் ? அம்னோ 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்துள்ளது, மலாய்க்காரர்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அந்த கால அவகாசம் போதாதா ?”
“மலாய்க்காரர்கள் அவர்களது சொந்த மண்ணில் அகதிகளாவதற்கு பொருளாதார ரீதியில் போடியிட முடியாதது காரணமல்ல. அந்நியர்களைக் கொண்டு வந்து 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறும் பொருட்டு அவர்களுக்கு அடையாளக் கார்டுகளைக் கொடுத்த பிஎன் -னே காரணம் என பிகேஆர் மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் கூறினார்.
மலாய்க்காரர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒன்றுபட வேண்டும், இல்லை என்றால் அவர்கள் ஒரம் கட்டப்படுவர் என கடந்த புதன் கிழமை அம்னோ மகளிர் பிரிவின் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறியது மீது சுராய்டா கருத்துரைத்தார்.
வழக்கம் போல ஷாரிஸாட் இனவாதப் பூச்சாண்டியைக் காட்டியதுடன் இந்த நாட்டிம் பொருளாதார வலிமை மலாய்க்காரர் அல்லாதாரிடம் இருப்பதாகவும் அம்னோ அதிகாரத்தை இழந்தால் அது மலாய்க்காரர்கள் ‘அதிகாரத்தை இழப்பதற்குச் சமம்” என்றும் கூறினார்.
அந்த நிலைமை இன்னொரு மே 13க்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் ஷாரிஸாட் எச்சரித்திருந்தார்.
ஷாரிஸாட் இனவாத அட்டையைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்திய சுராய்டா அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியாக் கோட்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றார்.
“அம்னோ உதவி செய்யும் மலாய்க்காரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் சம்பந்தப்பட்ட அம்னோ சேவகர்களுமே அம்னோ உதவியால் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றனர் என்பதையும் அதற்கு கீழே உள்ளவர்கள் உதவிகள் வடிவத்தில் வழங்கப்படும் பிச்சைகளையே ருசிக்க முடிகிறது என்பதையும் ஷாரிஸாட் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
பல அம்னோ தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் அம்னோ தங்கள் உரிமைகளுக்குப் போராடும் என மக்கள் இப்போது கருதுவதில்லை என்ற உண்மையையும் அம்னோ ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சுராய்டா சொன்னார்.
“ஆகவே இனவாத உணர்வுகள் வழி மலாய்க்காரர்களை முட்டாளாக்கும் மேலோட்டமான அரசியலை நிறுத்திக் கொள்ளுமாறு நான் ஷாரிஸாட்டுக்கு நினைவுபடுத்த விரும்புகிறென். ஏனெனில் மக்கள் முட்டாள்கள் அல்ல. வைரத்துக்கும் கல்லுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அவர்கள் சொல்லவும் முடியும்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசு சாரா அமைப்பு போலீசில் புகார் செய்யும்
இதனிடையே கடந்த புதன் கிழமை ஷாரிஸாட் மே 13 தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் “ஆபத்தானவை”எனத் தாங்கள் கருதுவதால் அதற்கு எதிராகப் போலீசில் புகார் செய்வதற்கு Angkatan Warga Aman Malaysia (WargaAman) என்ற அமைப்பு எண்ணியுள்ளது.
ஷாரிஸாட் கருத்துக்களில் மிரட்டலும் அச்சுறுத்தலும் மலேசிய குடிமக்களிடையே குழப்பத்தை தூண்டி விடும் நோக்கமும் அடங்கியுள்ளதாக வர்க்கா அமான் கருதுகிறது,” என அதன் செயலாளர் எஸ் பாரதிதாசன் கூறினார்.
“ஆகவே இன, சமய வேறுபாடின்றி அனைத்து அரசு சாரா அமைப்புக்களும் நாடு முழுவதும் ஷாரிஸாட் அறிக்கைக்கு எதிராக போலீசில் புகார் செய்ய வேண்டும் என வர்க்கா அமான் கேட்டுக் கொள்கிறது,”என அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.