மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணைக்கு வருமாறு சங்கப் பதிவகம் மேலும் மூவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
வழக்குரைஞர்கள் ஃபாதியா நத்வா பிக்ரி, அமீர் ஹம்சா, சுவாராம் செயல்முறை இயக்குனர் நளினி ஏழுமலை ஆகியோரே அம்மூவருமாவர். அவர்கள் 1966ஆம் ஆண்டு சங்கச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவர்.
அச்சட்டம், பதிவுபெற்ற அல்லது சட்டவிரோத ஒரு அமைப்புப் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றியோ தகவல் அறிந்தவர் என்று கருதப்படும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் அதிகாரத்தை ஆர்ஓஎஸ்ஸுக்கு வழங்குகிறது.
இதன் தொடர்பில் ஃபாதியா (இடம்) வைத் தொடர்புகொண்டு பேசியபோது அவ்விசாரணையை ஒருவகை தொந்தரவு என்று வருணித்த அவர், அது ரிம7.3 பில்லியனுக்கு இரண்டு நீர்மூழ்கிகள் வாங்கியதில் கையூட்டு கொடுக்கப்பட்டது பற்றி பிரெஞ்ச் நீதிமன்றத்தில் அது தொடர்ந்துள்ள வழக்கு உள்பட சுவாராமின் நடவடிக்கைகளை முடக்கிப்போடும் முயற்சியுமாகும் என்றார்.
“ஸ்கோர்பியன் ஊழல் மீது வழக்கு தொடுத்தற்காக தொந்தரவு செய்கிறார்கள் மிரட்டுகிறார்கள்.
“சுவாராமை விசாரிக்கும் அதிகாரம் ஆர்ஓஎஸ்ஸுக்கு இல்லை. நாங்கள் மலேசிய நிறுவன ஆணையத்தில் (சிசிஎம்) பதிவு செய்து கொண்டிருப்பர்கள்”, என்றாரவர்.
சுவாராம் விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பலர் நவம்பர் 12-இல் விசாரிக்கப்பட்டனர்.
சீன அசெம்ப்ளி மண்டபத்திடமும் விசாரணை
இதனிடையே சுவாராம் மீதான விசாரணை விரிவடைந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை போலீஸ் கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்துக்கும் சென்றது. சீன அசெம்ப்ளி மண்டபத்தில்தான் சுவாராம் அதன் செய்தியாளர் கூட்டங்களை நடத்துவது வழக்கம்.
“பிற்பகல் 2மணி வாக்கில் போலீசார் வந்தனர். ஒரு மணி நேரம் விசாரணை செய்தனர். வாடகை பாரங்கள், சுவாராம் கொடுத்த வாடகைப் பணத்துக்கான ரசீதுகள் போன்றவற்றை நகலெடுத்துக் கொண்டார்கள்”, என்று சீன அசெம்ப்ளி மண்டபத்தின் தலைமை செயல் அதிகாரி தாங் ஆ சாய் (வலம்) தெரிவித்தார்.
இது ஒன்றும் புதிதல்ல என்று கூறிய தாங், 2008-இல், இண்ட்ராப் அங்கு கூட்டம் நடத்தியபோதும் இப்படித்தான் நடந்தது என்றார்.
சீன அசெம்ப்ளி மண்டபத்தில் யார் வேண்டுமானாலும் வாடகை கொடுத்து கூட்டம் நடத்தலாம் என்பதால் அதிகாரிகள் பிரச்னை கொடுக்கக்கூடாது என்றார்.