தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கும் அரசாங்க யோசனையை பக்காத்தான் ஏற்றுக் கொண்ட போதிலும் தேர்தல் ஆணையம் சொந்தமாக சீர்திருத்தங்களை அமலாக்காமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கக் கூடாது என அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
“தேர்தல் ஆணையம் எந்தச் சீர்திருத்தத்தையும் அமலாக்காமல் இருக்கவும் தாமதப்படுத்தவும் அல்லது காத்திருக்கவும் அந்தக் குழுவை ஒரு காரணமாகக் காட்டக் கூடாது,” என நாடாளுமன்ற வளாகத்தில் பாஸ், டிஏபி ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய நிருபர்கள் சந்திப்பில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்தக் குழுவில் இடம் பெறும் மூன்று பக்காத்தான் பேராளர்களையும் அவர் அறிவித்தார். அஸ்மின் அலி (பிகேஆர்), பாஸ் தேர்தல் இயக்குநர் ஹாட்டா ராம்லி, டிஏபி தேர்தல் இயக்குநர் அந்தோனி லோக் ஆகியோரே அவர்கள்.
‘பதிவு நடைமுறையை எளிதாக்க வேண்டும்’
தேர்தல் ஆணையத்தின் முக்கியமான பணி வாக்காளர் பட்டியலை முறையாக வைத்திருப்பதாகும் என்பதை அந்த விவகாரம் மீது நடைபெற்ற விவாதத்தில் எதிர்த்தரப்புத் தலைவருமான அன்வார் சுட்டிக் காட்டினார்.
“தேர்தல் ஆணைய அதிகாரத்துக்கு உட்பட்டு எளிதாகத் தீர்க்கப்படக் கூடிய பிரச்னைகளை தொடருவதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதை காரணமாகப் பயன்படுத்த வேண்டாம்,” என்றார் அவர்.
“வாக்குகளுக்காக வங்காளதேசிகளுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூடக் கூறப்படுகிறது. எனது தொகுதியான பெர்மாத்தான் பாவ்-வுக்கான வாக்காளர் பட்டியலில் பல பிரச்னைகள் உள்ளன.
சிறிய வீடு ஒன்றின் முகவரியில் 70 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்..”
அதிகமான மக்கள் வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு முன்வரும் பொருட்டு பதிவு நடைமுறை எளிமையாக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் பரிந்துரை செய்தார்.
“தேர்தல் ஆணையத்துடன் கலந்துரையாட நாங்கள் அமரும் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் சொல்கின்றனர். அது நிற்க வேண்டும்,” என்றார் அவர்.