2010-இல் பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஷா ஆலம் மருத்துவ மனையை அடுத்த அக்டோபருக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பொதுப்பணி அமைச்சர் ஷசிமான் அபு மன்சூர்,300-படுக்கைகள் கொண்ட அம்மருத்துவ மனையைக் கட்டும் வேலை 98 விழுக்காடு முடிந்து விட்டதாகவும் இயந்திரக் கருவிகள் பொருத்தும் பணி மின் இணைப்பு வேலைகள் ஆகியவை அடுத்து நடக்கும் என்றும் சொன்னார்.
“அத்திட்டம் ரிம410 மில்லியன் ரிங்கிட்டுக்கு மறுகுத்தகைக்கு விடப்பட்டு கட்டுமான வேலைகள் 2010 அக்டோபர் 19-இல் தொடங்கின.(அது கட்டி முடிந்ததும்) கிள்ளான் துவாங்கு அம்புவான் ரஹிமா மருத்துவ மனையில் நெரிசல் குறையும்”. இன்று காலை மருத்துவ மனை கட்டப்படும் இடத்துக்கு சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாயுடன் வருகை புரிந்த ஷசிமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
கட்டுமான இடத்தில் வேலையாள்களே இல்லை என்று ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமட் கூறியதில் உண்மை இல்லை என்றும் சஷிமான் தெரிவித்தார்.
“அங்கு 750 பணியாளர்கள் இருக்கிறார்கள். பொதுப்பணித் துறை அதிகாரிகள் வேலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்”, என்று தெரிவித்த அவர், காலிட்டுக்கு சந்தேகம் தீரவில்லை என்றால் நேரில் சென்று பார்க்கலாம் என்றார்.
மருத்துவ மனை, திட்டப்படி கட்டி முடிக்கப்படுவதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சும் பொதுப்பணி அமைச்சுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக லியோ கூறினார்.
“நாங்கள் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். (நிபுணத்துவ மருத்துவ மனை) கட்டி முடிக்கப்பட்டதும் மக்களுக்கு நல்ல சேவை கிடைக்கும்”, என்றாரவர்.
இதற்குமுன் மருத்துவ மனை கட்டும் முக்கிய குத்தகை சன்ஷைன் பிலிட் சென், பெர்ஹாட் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அது சிலாங்கூர் அரண்மனைக்கு நெருக்கமான நிறுவனம் என்று தெரிகிறது.
அதன் வேலைகள் 62 நாள்கள் பின்தங்கி நின்றதாகவும் 2010 ஆகஸ்டுக்குப் பிறகு அங்கு ஒரு வேலையும் நடக்கவில்லை என்றும் ஷசிமான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அதனை அடுத்து அதன் குத்தகை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அப்போது 27விழுக்காடு வேலைகள் மட்டுமே நடந்திருந்தன. ஆனால், உண்மையில் 38.9 விழுக்காடு வேலை முடிந்திருக்க வேண்டும். அதுவரையிலும் ரிம139.9 மில்லியன் கொடுக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற நிலைமை மீண்டும் நிகழாதிருக்க அரசாங்கம் மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற முக்கிய திட்டங்களுக்கு அனுபவம் வாய்ந்த குத்தகையாளர்களையே தேர்ந்தெடுக்கும் என்று ஷசிமான் கூறினார்.