பாயான் பாரு எம்பி ஜஹ்ரேய்ன் முகம்மட் ஹிஷாம் அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பம் செய்திருப்பதை பினாங்கு மாநில பிகேஆர் தலைவர் சாடியுள்ளார்.
“ஜஹ்ரேய்ன் அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பம் செய்திருப்பது வியப்பளிக்கவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டால் அவருடன் மோத நாங்கள் தயார்”, என்று பெர்தாமில் மகளிர் பகுதி ஏற்பாடு செய்திருந்த நிதிதிரட்டும் விருந்தில் உரையாற்றியபோது மன்சூர் ஒஸ்மான் (இடம்) கூறினார்.
“ஆனால், பிஎன் அவருக்கு இடம் கொடுப்பது சந்தேகமே. பினாங்கு மக்களுக்குத் ‘தவளைகள்’ பிடிக்காது என்பதால் அவருக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்”.
ஜஹ்ரேய்ன் அம்னோவிலிருந்து பிகேஆருக்குத் “தாவினார்”, பின்னர் 2010-இல் அதிலிருந்து விலகி சுயேச்சை எம்பி ஆனார் என்பதைச் சுட்டிக்காட்டிய மன்சூர் அவர்மீது யாருக்கும் நம்பிக்கை வருமா என்று கேள்வி எழுப்பினார்.
சனிக்கிழமை, பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் பினாங்கு பாயான் பாரு அம்னோ தொகுதி அலுவலகம் சென்றபோது ஜஹ்ரேய்னும் அவருடன் மேலும் 347 முன்னாள் பிகேஆர் உறுப்பினர்களும் அம்னோவில் சேர விண்ணப்பித்துக் கொண்டார்கள்.
பிகேஆரிலிருந்து வெளியேறியதும் ‘பிஎன்- ஆதரவாக’ செயல்பட்டு வந்துள்ள ஜஹ்ரேய்ன், பாலேக் பூலாவ் தொகுதியில் களமிறங்கும் நோக்கில் அங்குள்ள அடிநிலை மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் அத்தொகுதியின் இப்போதைய எம்பி பிகேஆரின் யுஸ்மடி யூசுப்.
ஆனால், அத்தொகுதியின் மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களான டாக்டர் ஹில்மி யாஹ்யா(தெலுக் பாகாங்), முகம்மட் பாரிட் சாஆட் (புலாவ் பாகாங்), சைட் அமிருடின் சைட் அஹ்மட் (பாயான் லெப்பாஸ்) ஆகியோரும் அத்தொகுதிமீது ஒரு கண் வைத்திருப்பதாக வதந்திகள் உலவுகின்றன.
“அப்படி இருக்கும்போது அந்த இடத்தை அம்னோ அவருக்குக் கொடுக்குமா? ஜஹ்ரேய்னுக்கு இடம் கொடுத்தால் அம்னோவில் ஏற்கனவே உள்ள பிரச்னைகள் மேலும் மோசமாகும்”, என்று பெனாந்தி சட்டமன்ற உறுப்பினரான மன்சூர் கூறினார்.
ஜஹ்ரேய்ன்: நம்பி மோசம் போனேன்
சனிக்கிழமை, பெர்னாமா ஜஹ்ரேய் கூறியதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. “மலாய்க்காரர்களுக்காக போராடக்கூடியதும் மலாய்க்காரர்-அல்லாதாரைக் கவனித்துக்கொள்ளக்கூடியதுமான ஒரே கட்சி அம்னோதான்”, என்றவர் கூறியதாக அச்செய்தி கூறிற்று. .
“மாற்றரசுக் கட்சியின் போராட்டத்தை நம்பி மோசம் போனேன். பிகேஆரும் பாஸும் மலாய்க்காரர்களுக்காகப் போராடுவதாகக் கூறி அதைவைத்து ஆதாயம் காண்கின்றன. வாக்குறுதிகள் வழங்குவதில் மட்டுமே அவர்கள் கெட்டிக்காரர்கள்”, என்றாரவர்.
ஜஹ்ரேய்ன் பாயான் பாருவைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்க மாட்டார் என்று தெரிகிறது. அத்தொகுதியில் மசீச வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகேஆர் சார்பாக, இப்போது பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள சிம் ட்ஸெ ட்ஸின் (இடம்) அங்கு போட்டியிடலாம்.