மலிவான அம்னோ நிலம்: இப்போது அம்னோ அங்காடித் தொழிலிலும் இறங்கியுள்ளது

அம்னோ மலிவான விலைக்கு பெற்ற இன்னொரு நிலத்துக்கு டிஏபி இன்று வருகை அளித்தது. அந்த இடம்  இப்போது பரபரப்பான அங்காடி வியாபார மய்யமாகத் திகழ்கின்றது. அதற்குப் பின்னால் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

சிலாங்கூர் சுங்கைவே-யில் 5,010.6 சதுர அடி பரப்புள்ள அந்த நிலம் 1981ம் ஆண்டு ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலைக்கு பெட்டாலிங் ஜெயா அம்னோவுக்கு கொடுக்கப்பட்டது என கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறினார்.

தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பின்னர் அந்த நிலம் இப்போது பெரும்பாலும் பெட்டாலிங் ஜெயா அம்னோ உத்தாராவிடம் இருக்க வேண்டும் என அவர் எண்ணுகிறார்.

“இது வர்த்தக நிலமாகும். ஆனால் விவசாய நிலத்தை விடக் குறைவான விலைக்கு அது விற்கப்பட்டுள்ளது,” என அவர் அந்த இடத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த இடத்துக்கு என்ன விலை கொடுக்கப்படலாம் என்பது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் அருகில் உள்ள வர்த்தக நிலத்தின் மதிப்பு ஒரு சதுர அடிக்கு 100 ரிங்கிட் என லாவ் சொன்னார்.

கூட்டரசு நெடுஞ்சாலையை ஒட்டி முக்கியமான இடத்தில் அமைந்துள்ள அந்த நிலத்தின் மூலம் அங்காடிக் கடைகளிலிருந்து வாடகை, தங்கும் விடுதி வாடகை ஆகியவை வழி அம்னோ ஆதாயம் பெறும் சாத்தியமும் உள்ளது என்றார் அவர்.

“அம்னோ மக்களை வியாபாரம் செய்ய அங்கு அனுமதித்து வாடகை வசூலிக்கிறது. அந்த ஆதாயம் அரசாங்கத்துக்குச் செல்லவில்லை. கட்சிக்கு செல்கிறது,” என்றார் அவர்.

“அம்னோ நிலத்தை பெறலாம். ஆனால் அது பொருத்தமான வழிகளில் சந்தை விலையில் வாங்கப்பட வேண்டும். அரசாங்கச் சொத்துக்கள் மூலம் அது ஆதாயமடையக் கூடாது.”

‘அரசாங்கத்துக்கு இழப்பீடு கொடுங்கள்’

அந்த இடத்தில் அங்காடி வியாபாரிகள் இயங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அந்த நிலத்தைமிகவும் மலிவான விலைக்குப் பெற்று அதில் கட்டப்பட்ட விடுதிகளை வாடகைக்கு விடுவதின் மூலம் அம்னோ ஆதாயம் அடைவது நியாயமல்ல என லாவ் மேலும் வலியுறுத்தினார்.

“பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் அது அரசாங்கத்துக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் அல்லது அந்த நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்,” என்றார் அவர்.

அந்த இடத்தை அம்னோ வாங்கியிருக்கா விட்டால் இன்னும் அதிகமான மக்களுக்கு அது பயன்பட்டிருக்கும் என லாவ் தொடர்ந்து கூறினார். ஏனெனில் சுங்கைவே-யில் நிலம் கிடைப்பது மிகவும் அரிதாகும். அங்கு பொழுதுபோக்கு இடங்களே கிடையாது.

அந்த மய்யத்தில் தாம் மூன்று சிறிய மனைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரிங்கிட் கொடுப்பதாக அங்கு வியாபாரம் செய்யும் அங்காடிக்காரர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

 

TAGS: