முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் அண்மையில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் எதிராக ஆவேசமாக பேசியிருப்பது ‘இன்னொரு நாடகம்’ என்று முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் கூறுகிறார்.
மூசா அறிக்கைகள் உண்மையானவை என்றும் அவர் திருந்தி போலீஸ் படையின் புகழை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு உதவ விரும்பிறார் என்றும் தாம் நம்பியதாகவும் அவர் சொன்னார்.
“அண்மையில் அமைச்சர்களுக்கு எதிராகவும் அம்னோ தலைமைத்துவத்திற்கு எதிராகவும் பல கருத்துக்களை மூசா வெளியிட்டார். ஆனால் அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பான புலனாய்வில் எந்தத் தலையீடும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
“குதப்புணர்ச்சி வழக்கு ஒன்று, இரண்டு ஆகியவற்றில் அன்வாரை சிக்க வைக்க எந்தச் சதித் திட்டமும் தயாரிக்கப்படவில்லை என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதில் சம்பந்தப்படவில்லை என்றும் மூசா சொல்லியிருக்கிறார்.”
“மூசாவின் ஆவேசம் அல்லது அதனை நீங்கள் எப்படி அழைத்தாலும் அது இன்னொரு சண்டிவாரா (நாடகம்) என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை,” என மாட் ஜெய்ன் கூறினார்.
அம்னோ தலைமைத்துவம், மூத்த அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக செயல்படுவது போல மூசா பாசாங்கு செய்கிறார். உண்மையில் அவர் சிலரை குறிப்பாக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லைப் பாதுகாக்கிறார்.”
“ஒருவருடைய உண்மையான போக்கை சோதிப்பது எந்தச் சிரமமும் இல்லை என்பதை மூசா உணர வேண்டும்.”
தாம் அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பான விசாரணையில் சம்பந்தப்படவில்லை என்றாலும் முன்னாள் புலனாய்வு அதிகாரி என்ற முறையிலும் கிரிமினல் புலனாய்வுகளுக்கு பொறுப்பாக இருந்தவன் என்ற முறையிலும் ஒரு விஷயம் மறைக்கப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும்,” என்றும் மாட் ஜெய்ன் சொன்னார்.
“மூசாவுடனும் கனியுடனும் வேலை செய்தவன் என்பதால் அந்த இருவரும் என்ன செய்வர் என்பதும் எனக்குத் தெரியும்,” என அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
கிரிமினல் சதியும் குற்றத்தை மறைப்பதும் கடுமையான குற்றங்கள் என மாட் ஜெய்ன் மேலும் எச்சரித்தார்.