பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியில் அரசியல் நடவடிக்கைகளில் சேர்ந்து கொள்ளலாம். பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதும் அவற்றுள் அடங்கும்.
அந்தத் தகவலை உயர் கல்வி அமைச்சர் முகமட் காலித் நோர்டின் நேற்றிரவு வெளியிட்டார்.
1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லுரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மாணவர்கள் அரசியல் கட்சிகளில் சம்பந்தப்படவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதி அளிப்பதாக அவர் சொன்னார்.
“தேர்தலில் வெற்றி பெறக் கூடிய நம்பிக்கை மாணவர்களுக்கு இருந்தால் அவர்கள் எந்தக் கட்சி சார்பிலும் போட்டியிடலாம். மாணவர்களுடைய ஆற்றலுக்கு அரசாங்கம் கொடுக்கும் அங்கீகாரம் இதுவாகும்.”
அவர் 2012ம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்கள் மாநாட்டையும் ஒரே குடிமகன் சான்றிதழ் திட்டத்தையும் புத்ராஜெயாவில் தொடக்கி வைத்த பின்னர் முகமட் காலித் நிருபர்களிடம் பேசினார்.
தங்கள் எதிர்காலத்துக்கு விவேகமாக சிந்திக்கக் கூடிய ஆற்றலை மாணவர்கள் பெற்றுள்ளனர் என அரசாங்கம் நம்புவதால் பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவும் அனுமதிக்கப்படுகின்றது என்றார் அவர்.
என்றாலும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கட்சி அரசியலைக் கொண்டு வரக் கூடாது என்றும் அவர் சொன்னார்.
“பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் ஐக்கியத்தை நிலைநிறுத்த வேண்டும். பல்கலைக்கழகம் நடுநிலையான அமைப்பாக திகழ வேண்டும். பல்கலைக்கழகம் தனது அவாக்களையும் கல்வி நோக்கங்களையும் அடைவதற்கு உதவியாக கட்சி அரசியல் அதற்குள் நுழையக் கூடாது.”
“பகுத்தறிவு சிந்தனை கொண்ட, அறிவாற்றல் மிக்க மாணவர்களை உருவாக்கும் பொருட்டு பல்கலைக்கழக வளாகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்,” என்றும் முகமட் காலித் சொன்னார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதின் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் பொருட்டு ஒரே குடிமகன் சான்றிதழ் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா