கிளந்தானில் அண்மையில் எழுந்துள்ள ஆண்-பெண் பிரிவினை, கல்வாத் பிரச்னைகளுக்கு டிஏபி மீது கண்டனங்களைத் தொடுத்துள்ள மசீச-வும் கெரக்கானும் ‘எங்கள் கொல்லைகள் மீது குப்பைகளை எறிவதற்கு முன்னர் தங்கள் கொல்லைப் புறத்தைக் கவனிக்க வேண்டும்’ என டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரன் சாடியுள்ளார்.
2003ம் ஆண்டு ஈப்போவில் இஸ்லாமியச் சட்டங்களை முஸ்லிம் அல்லாதவர் மீது திணிக்கப்பட்டது தொடர்பில் நிகழ்ந்த சில சம்பவங்களை ஈப்போ பாராட் எம்பி-யுமான குலசேகரன் நினைவு கூர்ந்ததுடன் அந்த சம்பவங்கள் குறித்து மசீச-வும் கெரக்கானும் அப்போது மௌனமாக இருந்தது, “அண்மைய வாரங்களில் கோத்தா பாருவில் நிகழ்ந்த சம்பவங்கள் மீது டிஏபி-யைக் குறை கூறும் அவற்றின் இரட்டை வேடத்தை” காட்டுகின்றது என்றும் சொன்னார்.
ஈப்போவில் 2003ல் நிகழ்ந்த அந்த மூன்று சம்பவங்களில் பூங்கா ஒன்றிலும் விளையாட்டுத் திடல் ஒன்றிலும் பொது நூலகம் ஒன்றிலும் கைகோர்த்துச் சென்றது போன்ற சாதாரண விஷயத்துக்காக ஈப்போ மாநகராட்சி மன்ற அதிகாரிகள் முஸ்லிம் அல்லாத ஜோடிகளுக்குக் குற்றப்பதிவுகளை வழங்கினார்கள் என குலசேகரன் கூறினார்.
“குற்றப்பதிவு கொடுக்கப்பட்ட அந்த ஜோடிகள் தங்கள் நிலை குறித்து என்னிடம் புகார் செய்த பின்னர் நான் அந்த விஷயத்தை ஈப்போ மாநகராட்சி மன்றத்திடம் கொண்டு சென்றேன்,” என்றார் அவர்.
“நாகரீகமற்ற நடத்தைக்கு எதிராக 1995ம் ஆண்டு மசீச , கெரக்கான் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுடைய ஒப்புதலுடன் வரையப்பட்ட துணைச் சட்டங்களை அந்த ஜோடிகள் மீறியுள்ளதாகக் கூறப்பட்டது. 2003ல் அந்தச் சட்டங்களின் கீழ் குற்றப்பதிவு கொடுக்கப்பட்ட போது மசீச-வும் கெரக்கானும் அமைதியாக இருந்தன.”
“அதே மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பின்னர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் கூட உயர்ந்துள்ளனர். இரு பாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீதும் ஹோட்டல்களில் ஒன்றாகக் காணப்படும் முஸ்லிம் அல்லாத ஜோடிகள் மீதும் கோத்தா பாரு நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக அவர்கள் ஒரே குரலில் கூச்சல் போட்டுக் கொண்டு இரட்டை வேடம் போடுகின்றனர்,” என குலசேகரன் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
டிஏபி நிலையில் எந்த மாற்றமும் இல்லை
அத்தகைய துணைச் சட்டங்களை எதிர்க்கும் இயக்கத்தில் டிஏபி நிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
“இப்போது மசீச-வும் கெரக்கானும் எதிர்க்கும் அதே துணைச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என 2003ம் ஆண்டிலேயே டிஏபி கேட்டுக் கொண்டது. அவற்றின் வேண்டுகோள் கால தாமதமாக வந்தாலும் ஒரு போதும் அந்த வேண்டுகோளை விடுக்கமால் இருப்பதை விட கால தாமதம் எவ்வளவோ மேலானது,” என குலசேகரன் தெரிவித்தார்.
“ஈப்போவில் 2003ம் ஆண்டு முஸ்லிம் அல்லாதவர் மீது இஸ்லாமியச் சட்டங்கள் அமலாக்கப்பட்டதற்கு தெரிவித்த அதே எதிர்ப்பை இப்போது கிளந்தானில் முஸ்லிம் அல்லாதவர் மீது இஸ்லாமியச் சட்டங்கள் திணிக்கப்படுவதற்கும் டிஏபி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.
“டிஏபி ஒரு போதும் தனது நிலையிலிருந்து பிறழவில்லை. அதன் எதிர்ப்பில் உறுதியாக உள்ளது. ஆனால் மசீச-வும் கெரக்கானும் சந்தர்ப்பவாதிகள் என்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன,” என்றும் குலசேகரன் சாடினார்.