சட்ட விரோதமாக மூலதனம் வெளியேறுவதில் மலேசியா உலகில் இரண்டாவது இடம் வகிக்கிறது

bank2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் ரிங்கிட் கள்ளப் பணம் வெளியேறியிருக்கிறது.

ஆசியாவின் பொருளாதார வல்லரசு எனக் கருதப்படும் சீனா, உலக மூலதன வெளியேற்றத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் அதாவது இரண்டாவது இடத்தில் மலேசியா இருப்பதாக வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜிஎப்ஐ என்ற Global Financial Integrity (GFI) நிதி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான மூலதனம் கள்ளத்தனமாக 2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து வெளியேறியுள்ளது என அது தெரிவித்தது.

சட்ட விரோதமாக நிதிகள் வெளியேறுவதை மதிப்பீடு செய்வதற்கு ஜிஎப்ஐ இப்போது புதிய வழி முறையை உருவாக்கியுள்ளது. அது கறுப்புப் பணத்தைத் துல்லிதமாக அறிந்து கொள்வதற்கு வகை செய்கின்றது. அதனால் அதன் முந்திய மதிப்பீடுகள் திருத்தப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டு 46.86 பில்லியன் அமெரிக்க டாலர் (143.3 பில்லியன் ரிங்கிட்) கள்ளத்தனமாக மலேசியாவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாக கடந்த ஆண்டு ஜிஎப்ஐ மதிப்பிட்டது. அது தற்போது 30.41 பில்லியன் டாலர் (93 பில்லியன் ரிங்கிட்) என மாற்றப்பட்டுள்ளது.

அதனுடன் ஒப்பிடுகையில் 2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து வெளியேறிய மூலதன அளவு 64.38 பில்லியன் டாலராக (196.8 பில்லியன் ரிங்கிட்) அதிகரித்துள்ளது.bank1

2011, 2012-களுக்கான புள்ளி விவரங்களை ஜிஎப்ஐ இன்னும் பெறவில்லை. ஆனால் எதிர்கால அறிக்கைகளில் அது சேர்த்துக் கொள்ளப்படும்.

மலேசியாவின் மூலதன வெளியேற்றம் “சில ஆசிய நாடுகளில் காணப்படும் அளவுக்கு இருப்பதாக” அந்த உலக நிதிக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்தது.

“வளரும் நாடுகளிலிருந்து சட்ட விரோத நிதிகள் வெளியேற்றம்: 2011-2010′ என்னும் தலைப்பைக் கொண்ட ஜிஎப்ஐ அறிக்கையை அந்த அமைப்பின் பொருளாதார வல்லுநர்களான சாரா பெரைட்டாஸும் தேவ் கார்-ம் தொகுத்துள்ளனர். தேவ் கார் அனைத்துலக பண நிறுவனத்தில் முன்பு முதுநிலை பொருளாதார வல்லுநராகப் பணியாற்றினார்.

2001 முதல் 2010 வரைக்குமான 10 ஆண்டுகளில் மலேசியாவிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறிய மொத்த மூலதன அளவு- சீனா, மெக்சிக்கோ ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாம் நிலையில் மலேசியாவை வைத்துள்ளது.

அந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 285 பில்லியன் டாலர் ( 871.4 பில்லியன் ரிங்கிட்) மலேசியாவிலிருந்து வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து 2,740 பில்லியன் டாலரும் மெக்சிக்கோவிலிருந்து 476 பில்லியன் டாலரும் வெளியேறியுள்ளன.

ஜிஎப்ஐ வழங்கிய புள்ளி விவரங்களை கடந்த ஆண்டு  மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2000-2009 வரை மொத்தம் 135.3 பில்லியன் ரிங்கிட் மட்டுமே வெளியே போயிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜிஎப்ஐ அறிக்கைக்கு ஆதரவாக லண்டனைத் தளமாகக் கொண்ட Tax Justice Network என்ற அமைப்பும் இவ்வாண்டு தொடக்கத்தில் புதிய ஆய்வை வெளியிட்டது. மூலதன வெளியேற்றம் என வரும் போது மலேசியா உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாக அது கூறியது.

bank2கள்ளப்பணத்தில் 20 விழுக்காடு ஊழல் பணமாகும்

வளரும் நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக வெளியேறிய பணத்தில் 80.1 விழுக்காடு- வர்த்தக விலைகளைதவறாகக் குறிப்பிடுவது சம்பந்தப்பட்டதாகும். நிறுவனங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் குறைவாக அல்லது அதிகமாக விலைகளை குறிப்பதின் வழி ஆதாயத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுவது அந்த நடைமுறையாகும் என ஜிஎப்ஐ கூறியது.

“வளரும் உலகில் குற்றச் செயல்கள், ஊழல், வரி ஏய்ப்பு ஆகியவற்றின் மூலம் 2010ம் ஆண்டு 858.8 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. 2008ல் அந்த இழப்பு 871.3 பில்லியன் டாலராக இருந்தது.

உலக அளவில் காணப்படும் கள்ளப்பண மதிப்பு என தான் குறிப்பிட்டுள்ள அளவு ‘மிகவும் குறைவானது” என்றும் அதில் சேவைகளுக்கு விதிக்கப்படும் விலைகளில் காணப்படும் தில்லுமுல்லு, சட்ட விரோத நாணயப் பரிவர்த்தனை, ரொக்கத்தில் நடைபெறும் பேரங்கள் ஆகியவை சேர்க்கப்படவில்லை என்றும்  ஜிஎப்ஐ தெரிவித்தது.

“போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் இதர நடவடிக்கைகள் ரொக்கம் மூலம் தீர்க்கப்படுகின்றன. அவை இந்த மதிப்பீட்டில் சேர்க்கபடவில்லை,” என்றார் தேவ் கார்.

ஆசியாவே அதிகமாக மூலதனத்தை இழக்கிறது என ஜிஎப்ஐ சொல்கிறது

“உலக அளவில் மூலதன வெளியேற்றத்தில் 61.2 விழுக்காடு ஆசியாவை சார்ந்துள்ளதால் வளரும் நாடுகளேஅதற்கு முக்கிய உந்து சக்தியாக திகழ்கின்றன என்பதை நாங்கள் கண்டு பிடித்தோம்.”   “உண்மையில் சட்ட விரோதமாக பணம் வெளியேறும் உலகின் தலையாய பத்து நாடுகளில் ஐந்து ஆசியாவில் உள்ளன. சீனா, மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தியா, இந்தோனிசியா ஆகியவையே அந்த நாடுகள்.”

வளரும் நாடுகளிலிருந்து மூலதனம் கள்ளத்தனமாக வெளியேறுவதைத் தடுக்க வேண்டுமானால் உலக நிதி முறையில் வெளிப்படையான போக்கு அதிகரிக்க வேண்டும் என ஜிஎப்ஐ வலியுறுத்தியது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முந்திய ஜிஎப்ஐ அறிக்கை வெளியான பின்னர் அது குறித்து பாங்க் நெகாரா விளக்கமளிக்கும் என நிதி அமைச்சருமான நஜிப் அறிவித்தார்.

அதற்கு பின்னர் நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம், பாங்க் நெகாரா விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் இது நாள் வரையில் பாங்க் நெகாரா தனது விசாரணை முடிவுகளை வெளியிடவும் இல்லை, கள்ளத்தனமாக மூலதனம் பெரிய அளவில் வெளியேறியுள்ளதற்கு விளக்கமும் தரவில்லை.

அந்த விசாரணைக்கு ஜிஎப்ஐ பொருளாதார நிபுணர்கள் உதவி செய்ய முன் வந்ததையும் பாங்க் நெகாரா ஏற்கவில்லை.