ஆசிரியர் பயிற்சி வழங்கும் தனியார் உயர்கல்விக் கூடங்கள், அங்கு பயிற்சிபெற்று இன்னும் வேலை கிடைக்காதிருக்கும் 7,000 பேரின் விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை ஆசிரியர் பயிற்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிகேஆர் கூறியுள்ளது.
ஆசிரியர் பயிற்சி பெற்று இன்னும் வேலையில்லாதிருப்போரின் பிரச்னைக்குத் தீர்வுகாண அரசாங்கம் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதால் இவ்வாறு செய்வது அவசியம் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று கூறினார்,
அப்பிரச்னை குறித்து கல்வி துணை அமைச்சர் புவாட் ஜர்காசியும் கல்வி அமைச்சர் முகைதின் யாசினும் முரண்படும் அறிக்கைகள் விடுப்பதாக ரபிஸி குறிப்பிட்டார்.
பெரும்பாலான அந்தப் பட்டதாரி ஆசிரியர்கள் யுனிவர்சிடி துன் அப்துல் ரசாக்(யுனிடார்)கைச் சேர்ந்தவர்கள். அப்பல்கலைக்கழகத்தை யாயாசான் பிந்தார் நிர்வகித்து வருகிறது.
யாயாசான் பிந்தாரின் தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். துணைப் பிரதமர் முகைதின் யாசின், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அமைச்சர் முஸ்தபா முகம்மட், அலி ருஸ்தம் முதலியோருக்கும் அதில் முக்கிய பொறுப்புண்டு.
“தனியார் கல்விமையங்களில் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர் தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பயில்கிறார். ஆனால், அது நடப்பதில்லை என்பது தெரிகிறது. வேலை கிடைக்காத பட்டதாரிகள் அம்னோவிடம் முறையிட்டார்கள். அது பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை. இப்போது எங்களிடம் வந்துள்ளனர்.
“அவர்கள் ரிம20,000-க்கும் ரிம30,000-க்குமிடையிலான பிடிபிடிஎன் கடன்களைச் செலுத்தியாக வேண்டும். ஆனால், வேலை இல்லை. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண உயர்கல்வி அமைச்சும், கல்வி அமைச்சும் ஒருங்கிணைத்து செயல்படவில்லை”, என்றும் ரபிஸி வலியுறுத்தினார்.