இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ, மூன்றாவது இந்தோனிய அதிபர் பிஜே ஹபிபியை குறை கூறிய முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடினை கண்டித்த போதிலும் தமது கருத்துக்கள் இரு நாட்டு உறவுகளை பாதிக்காது என வாதிட்ட ஜைனுடின் அதற்காக மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார்.
தற்போது மலேசியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சுசிலோ அவ்வாறு கண்டித்ததாக இந்தோனிசியாவின் அதிகாரத்துவ அந்தாரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது என்றும் மலேசியாவில் அதிபர் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றும் ஜைனுடின் சின் சியூ டெய்லியிடம் கூறினார்.
“ஆகவே அந்தாரா மேற்கோள் காட்டியுள்ள சுசிலோ அறிக்கை மீது நான் கருத்துரைக்க மாட்டேன்.” “மலேசியாவில் சுசிலோ அவ்வாறு கண்டித்திருந்தால் கருத்துச் சொல்வது அவசியமா என்பதை நான் ஆராய்வேன். மலேசியாவுக்கும் இந்தோனிசியாவுக்கும் இடையிலான நல்ல உறவுகளை அந்த அறிக்கை பாதிக்கும் என நான் எண்ணவில்லை,” என அவர் சொன்னதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ம் தேதி உத்துசான் மலேசியாவில் வெளியான ஜைனுடின் கட்டுரை நேர்மையற்றது, பொருத்தமற்றது, புத்ராஜெயா-ஜகார்த்தா இரு வழி உறவுகளைப் பாதிக்கக் கூடியது என சுசிலோ சொன்னதாக அவர் மலேசியாவுக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக திங்கட்கிழமை அந்தாரா தகவல் வெளியிட்டது.
அன்வார் நடவடிக்கைகளை அந்தக் கட்டுரை கண்டிக்கிறது
ஜைனுடின் எழுதிய அந்தக் கட்டுரை டிசம்பர் 6ம் தேதி யூனிவர்சிட்டி சிலாங்கூரில் விரிவுரை நிகழ்த்த ஹபிபியை அழைத்த பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை குறை கூறியது.
கிழக்குத் தீமோரில் பொது வாக்கெடுப்பு நிகழ்வதற்கு மேற்கத்திய வல்லரசுகள் தொடுத்த நெருக்குதலுக்கு ஹபிபி பணிந்து விட்டதாகவும் ஜைனுடின் அந்தக் கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் விளைவாக ஹபிபி அதிபராக இருந்த 17 மாத காலத்துக்குள் கிழக்குத் தீமோர் சுதந்திரம் அடைந்தது என்றும் அவர் சொன்னார்.
ஹபிபி தமது நாட்டுக்கும் இனத்துக்கும் துரோகம் செய்து விட்டார் என்றும் ஹபிபியைப் போன்று அன்வாரும் அந்நிய வல்லரசுகளின் கட்டுப்பாட்டுக்கு இணங்கிப் போகக் கூடியவர் என்றும் ஜைனுடின் எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரை முடிவில் அவர்கள் இருவரும் “ஏகாதிபத்தியத்தின் நாய்கள்” என ஜைனுடின் குறிப்பிட்டிருந்தார்.
உத்துசானுடைய இணையப் பதிப்பில் வெளியான அந்தக் கட்டுரை பின்னர் காணாமல் போய் விட்டது.
மலேசியாவில் விரிவுரை நிகழ்த்த ஹபிபியை அழைத்ததின் மூலம் இந்தோனிசியாவின் வன்முறை ஆர்ப்பாட்ட கலாச்சாரத்தை கொண்டு வரும் அன்வார் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதே அந்தக் கட்டுரையின் நோக்கம் என்றும் ஜைனுடின் சொன்னார்.
“பல்கலைக்கழக விரிவுரை என்னும் பெயரில் வன்முறை ஆர்ப்பாட்ட கலாச்சாரத்தை கொண்டு வர அன்வார் முயன்றார். அது தான் மறைமுக நோக்கம். ஹபிபி டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்கை அல்லது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கைச் சந்திக்க மலேசியாவுக்கு வரலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அன்வாரை அல்ல.”
அன்வாருடைய நடவடிக்கைகள் மலேசியாவை குழப்பத்தில் மூழ்கடித்துள்ளன. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது, போலீசாரைத் தாக்குவது ஆகியவை உட்பட பல தெரு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நிகழ்வுகளும் அண்மைய காலமாக நடைபெற்றுள்ளன என்றும் ஜைனுடின் குறிப்பிட்டார்.
தாம் வழி நடத்தும் சாலை ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ளுமாறு சீன சமூகத்தினரை அன்வார் தூண்டியுள்ளார் என்றும் பிஎன் கூட்டரசு அரசாங்கத்தை வீழ்த்தி வன்முறை ஆட்சியை தோற்றுவிக்கும் தமது இலட்சியத்திற்கு அன்வார் தங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார் என்பது அந்த சமூகத்தினருக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார்.