சுங்கைப்பட்டாணி மோதல் தொடர்பில் 36 பேர் கைது

PDRMசுங்கைப்பட்டாணியில் மோதல் ஒன்றில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 36 பேரை விசாரணைக்கு உதவுவதற்காக கெடா போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

அந்தத் தகவலை கெடா போலீஸ் தலைவர் அகமட் இப்ராஹிம் இன்று வெளியிட்டார்.

18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் இப்போது சுங்கைப்பட்டாணியில் உள்ள கோலா மூடா போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அகமட் தெரிவித்தார்.

சுங்கைப்பட்டாணியில் நேற்று மாலை மணி 4.30 வாக்கில் சந்தேகத்துக்குரிய கடைசி நபர் கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் அடிப்படையில் இன்னும் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

“நாங்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வோம். பதற்றத்தை ஏற்படுத்த முயலும் யார் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்,” என அலோர்ஸ்டாரில் கெடா மாநில போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் அகமட் கூறினார்.

கோலா மூடாவில் குறிப்பாக சுங்கைப்பட்டாணியில் கலவரம் மூண்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் குறுஞ்செய்திகளிலும் வதந்திகளைப் பரப்பிய தரப்புக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், நிலவரம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய தரப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொள்ளும் என்றார்.

உண்மையில் இளைஞர் குழு ஒன்றுக்கு இடையில் சிறிய கைகலப்பு மட்டுமே நிகழ்ந்தது. வலைப்பதிவுகளிலும் சமூக ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டது போல கலவரம் அல்ல என்றார் கெடா போலீஸ் தலைவர்.

“நிலைமை அமைதியாக இருக்கிறது. நிலைமையை சீர்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முக நூல் வழியாகவும் நாங்கள் தகவல்களை வெளியிடுகிறோம். நாங்கள் எதனையும் மறைக்கவில்லை.”

-பெர்னாமா